மாவீரன் படம் குறித்து திருமாவளவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை, அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார்.
மாவீரன் படம்:
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது.
படத்தின் கதை:
பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
திருமாவளவன் அளித்த பேட்டி:
இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் மாவீரன் படத்தை பார்த்து திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா வெளியிட்ட மாவீரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. சிறந்த கதையை எடுத்திருப்பதற்கு என்னுடைய பாராட்டுக்கள். சென்னையில் ஏழை எளிய மக்களின் கதையையும், சென்னை கூவம் ஓரத்தில் வசிக்கும் மக்கள் நிலையும் அழகாக படத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
மாவீரன் படம் குறித்து சொன்னது:
சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் அவருக்கு வழங்கப்படும் குடியிருப்பின் தரம் மற்றும் அரசியலை குறித்து இந்த படம் பேசுகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் கண் கலங்க வைத்துவிட்டார். பொதுவாக, கதாநாயகன் ஆளுமை மிக்கவனாக திரைப்படங்களில் காட்டப்படும். ஆனால், இதில் கதாநாயகன் பயந்த சுபாவத்துடன் நடித்திருப்பது எதார்த்தமாக இருக்கிறது. மக்களின் குரலை பிரதிபலிப்பாக மாவீரன் படம் இருக்கிறது. சென்னையில் பல பகுதிகளில் அரசு கட்டிடங்கள் எப்போதும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த படம் இயக்கப்பட்டு இருப்பதற்கு இயக்குனருக்கு என்னுடைய பெரிய பாராட்டுக்கள் என்று கூறியிருக்கிறார்.