நாடக காதல் பற்றி பட விழாவில் திருமாவளவன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் லோக பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் செம்பியன் மாதேவி படத்தினுடைய இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது விழாவில் அவர், தமிழ்நாட்டில் காதல் என்பது அரசியலுக்கான ஒரு பேசும் பொருளாக இருக்கிறது. காதலைப் பற்றி பேசி ஆதாயம் தேட முடியும் என்பதை தமிழக அரசியலில் தான் பார்க்கிறோம். அரசியலைத் தாண்டி சினிமாவிலும் நாடகக் காதல் என்ற பெயரில் அரசியல் ஆக்கி அதை வணிகம் ஆக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை விட கெட்டிக்காரர்கள். சில பேர் என் பெயரையும் சொல்லி பிழைக்கிறார்கள்.
திருமாவளவன் பேட்டி:
என் பெயரை வைத்து திரைப்படம் எடுத்து அதில் வணிகம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு மூலதனமாக இருக்கிறேன். அதேபோல் நாடக காதல் என்பது ஒன்று கிடையவே கிடையாது. காதல் என்பது காலகாலமாக இருக்கிறது. காதல் எப்போதும் காதல் தான். அதற்கு நாடகம் தெரியாது. டி-ஷர்ட், ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் போட்டால் பெண்கள் மயங்கி விடுவார்கள். அவன் பின்னாலேயே போய் விடுவார்கள் என்பதை போல உருவாக்கி அதற்கு நாடகக் காதல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
நாடகக்காதல் பற்றி சொன்னது:
அப்படி எல்லாம் ஒன்று கிடையாது. நாடகம் செய்து யாரையும் ஏமாற்றி விட முடியாது. தான் பெற்ற பிள்ளைகளையே குறைத்து மதிப்பிட்டு, யாரையோ குறை சொல்வதற்கு பெற்ற பிள்ளைகளை கொச்சைப்படுத்த கூடாது. நம் வீட்டு பெண்களை நாமே இழிவுபடுத்தக் கூடாது. காதல் என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். அதை உருவாக்க முடியாது. ஒருவர் சொல்லி இன்னொருவர் அதை செய்யவும் முடியாது.
காதல் குறித்து சொன்னது:
எந்த படைப்பாக இருந்தாலும் தவறான தோற்றத்தை உருவாக்க கூடாது. காதலுக்கு எதிர்ப்பு கட்டாயமாக இருக்கும். அதனுடைய பரிமாணங்களும் நாட்டுக்கு நாடு மாறும். இந்தியாவைப் பொருத்தவரை இனகலப்பு, ஜாதி கலப்பு ஏற்பட விடக்கூடாது என்ற கருத்து மக்கள் இடம் இருக்கிறது. இது ஒவ்வொரு ஜாதிக்கு இடையிலான பிரச்சனை என்று பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பதற்கு காரணம், நடிகர் ரஞ்சித் நடிப்பில் உருவாகியிருக்கும் கவுண்டபாளையம் படம் தான்.
ரஞ்சித் இயக்கி நடித்து இருக்கும் படம்:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக ரஞ்சித் நடிக்கிறார். தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’. நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. பின் இந்த படத்தினுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவனை தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.