இயக்குனர் எழில் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இந்த படம் வெளியாகி 22 வருடங்கள் கடந்துவிட்டது. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் டவுசர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் பாரி வெங்கட். இவர் எஸ்வி சேகரின் நாடகங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் இவரை பற்றி பலருக்கும் தெரியாது. துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருந்தாலும் பயங்கரமாக கலக்கியிருப்பார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த பாரி வெங்கட் திருநெல்வேலி படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை சென்று விட்டு ஆம்னி பஸ்ஸில் சென்னை திரும்பியபோது விபத்தில் மரணமடைந்தார். சினிமாவில் உச்சத்துக்கு சென்ற சில மாதங்களிலேயே நடிகர் பாரி வெங்கட் இழப்பு சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது.
காக்கா கோபால் அளித்த பேட்டி:
இந்நிலையில் பாரி வெங்கட் குறித்து நகைச்சுவை நடிகர் காக்கா கோபால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியது, பாரி அண்ணனை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நான் இருந்தபோது என்னை சந்திக்கும் போதெல்லாம் அவர் நான் கேட்காமலேயே காசு கொடுத்துட்டு போவார். அவர் பணக்காரன் எல்லாம் இல்லை. இருந்தாலும் அவர்கிட்ட கடைசியா இருக்கிற காசைக் கூட என்கிட்ட கொடுத்து விட்டு சிரிச்சிட்டு போவார்.
பாரியை பற்றி காக்கா கோபால் சொன்னது:
அந்த மாதிரி நல்ல மனசு உள்ளவர். எனக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். சினிமாவில் பாரி அண்ணன் மிகப் பெரிய கலைஞன். அந்த ஸ்பாட்டில் காமெடி ட்ராக் கிரேட் பண்ணுவார். திருநெல்வேலி படத்தில் நானும், அவரும் நடித்திருந்தோம். அந்த பட சூட்டிங் முடித்துவிட்டு நாங்க ரெண்டு பேரும் கிளம்ப இருந்தது. அவர் டைரக்டர்கிட்ட காக்கா நல்ல நடிப்பான். அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று வருத்தமாக சொன்னார். சரி நாளைக்கு எஸ் எஸ் சந்திரன் உடன் ஒரு காமெடி டிராக் இருக்கு.
பாரி வெங்கட் இறந்த செய்தி:
அதில் இவன் பண்ணட்டும் என்று டைரக்டர் சொன்னார். சரின்னு சொல்லிட்டு பாரி அண்ணன் கிளம்பிட்டார். பின் ஒரு வாரமாக பாரி அண்ணனை காணோம்னு. நாங்கள் எல்லோரும் தேடிட்டு இருந்தோம். அப்போ தான் பாரி அண்ணன் பெரம்பலூர் பக்கத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. உடனே நகைச்சுவை நடிகர்கள் சேர்ந்து அவருடைய உடலை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்து பாரி அண்ணனுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதை செலுத்தினோம்.
நடிகர் விஜய் செய்த உதவி:
அதுமட்டுமில்லாமல் அண்ணன் இறந்த செய்தி கேட்டு நடிகர் விஜயும் அவருடைய தந்தையும் பாரி அண்ணன் வீட்டுக்கு வந்து அவங்க மனைவியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து விட்டு அஞ்சலி செலுத்திவிட்டு போனாங்க. துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பாரி அண்ணனுடைய காமெடி விஜய் சாருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு நல்ல நகைச்சுவை கலைஞனை இழந்து விட்டோம் என்றெல்லாம் வருத்தத்துடன் சொல்லி இருந்தார் என்று கூறி இருக்கிறார்.