பிரபல நடிகை த்ரிஷா நடித்து வெளியாகி இருக்கும் வெப் தொடர் தான் பிருந்தா. இந்த வெப் தொடரில் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ஆம்ணி, ரவீந்திர விஜய், ராகேந்து மௌலி உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கியுள்ள இந்த வெப் தொடருக்கு சக்தி காந்த் கார்த்திக் இசையமைத்துள்ளார். மேலும் sony LIV ஓடிடி தளத்தில் இந்த வெப் தொடர் வெளியாகி உள்ளது. திரில்லர் பாணியில் அமைந்திருக்கும் இந்த வெப் தொடர் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்:
கதையில் பிருந்தா ( த்ரிஷா) ஹைதராபாத் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். ஆனால், அங்கு அவரது திறமையை அனைவரும் உதாசீனப்படுத்துகிறார்கள். குறிப்பாக அந்தக் காவல் நிலையத்தில் முதன்மை பொறுப்பாளராக பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சாலமன் ( கோபராஜு விஜய்) ஆண் ஆதிக்கத்துடன் நடந்து கொள்கிறார். அந்த காவல் நிலையத்தில் பிருந்தாவை மதிக்கும் ஒரே ஒரு நபர் சப் இன்ஸ்பெக்டர் சாரதி ( ரவீந்திர விஜய்) மட்டும்தான். இடையில் பிருந்தாவின் கடந்த கால நினைவுகள் அவரை மனதளவில் தொந்தரவு செய்கின்றது.
இப்படி இருக்கும் சூழலில் பிருந்தாவின் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில், நதிக்கரை ஓரம் பிணம் ஒன்று கரை ஒதுங்குகிறது. அப்போது சாலமன் அதை தற்கொலை வழக்காக முடிக்க நினைக்கிறார். ஆனால் அது ஒரு கொலை என்று பிருந்தா உறுதியாக இருக்கிறார். பின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் அதைத்தான் உறுதி செய்கிறது. பிறகு அது ஒரு சீரியல் கில்லரின் வேலை என்று தெரிய வர. அந்தக் கொலைகளை செய்த குற்றவாளி யார்? அவர் அந்த கொலையை செய்வதற்கு காரணம் என்ன? பிருந்தாவின் கடந்த காலம் என்ன? என்பதுதான் இந்த வெப் சீரியஸின் மீதி கதை.
நடிகர் த்ரிஷா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த தொடரில் வரும் பிருந்தா கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல அமைதியான. நேர்மையான, புத்திசாலியான நூலில் முத்திரை பதித்துள்ளார். அதேபோல், நடிகர் ரவீந்திர விஜயும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆனந்த் சாமியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அவரது வெளிப்பாடுகள் தொடரும் பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு எபிசோடுக்கும் இடையே வைக்கும் சஸ்பென்ஸ் நம்மை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கிறது.
மேலும், இந்த தொடரில் வன்முறை காட்சிகள், ரத்தம் போன்றவை அப்பட்டமாக காட்டுவதால் குழந்தைகள் இதை பார்க்கும் வகையில் இல்லை. அதுமட்டுமில்லாமல், பெரும்பாலான எபிசோட்கள் விறுவிறுப்பாக சென்றாலும், சில எபிசோட்கள் ஆமை வேகத்தில் தான் செல்கின்றது. தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து விட்டு கதையை சுருக்கி இருக்கலாம். குற்றவாளி யார் என முதல் எபிசோடிலே சொல்லி விடுவதால் பின்வரும் எபிசோடுகளில் சுவாரஸ்யம் குறைந்துள்ளது.
நிறை:
த்ரிஷாவின் நடிப்பு
ஒளிப்பதிவு சிறப்பு
மிரட்டலான பின்னணி இசை
எபிசோடுகளுக்கு இடையே இருக்கும் சஸ்பென்ஸ்
குறை:
நிறைய லாஜிக் குறைபாடுகள் உள்ளன
குழந்தைகள் பார்க்கும் வகையில் இல்லை
தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்
மொத்தத்தில் ‘பிருந்தா’ சில பிழைகள் இருந்தாலும் நம்மை ஈர்ப்பதில் குறை வைக்கவில்லை.