தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைப்பது குறித்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக இருப்பவர் விஜய். இவருடைய ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வருவது அனைவ்ரும் அறிந்ததே. இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார்.
இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் அறிவித்து இருந்தார். இதனால் ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கட்சி சார்பாக விஜய் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புஸ்ஸி ஆனந்த் பேட்டி:
அதோடு பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் கட்சி நிர்வாகிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டையில் புதிதாக கட்சி அலுவலகம் கட்டப்பட்டிருக்கிறது. இதை தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்திருக்கிறார். பின் அவர் சந்தித்து பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் மோடி மூன்றாவது முறை பொறுப்பேற்று இருப்பது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் கூறுவார் என்று கூறியிருக்கிறார்.
கூட்டணி அமைப்பது குறித்து சொன்னது:
இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்குமா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுரை கூறியிருக்கிறார். அதன்படி தான் நாங்களும் நடந்து கொண்டிருக்கிறோம். இதை வைத்து தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட நோக்கி செல்கிறோம். கட்சி கூட்டணி அமைப்பது குறித்து தலைவர் விஜய் தான் அறிவிப்பார் என்று கூறியிருக்கிறார்.
புது செயலி அறிமுகம்:
மேலும், தன்னுடைய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது தான் இலக்கு. இதனால் புது செயலியை விஜய் அறிமுகம் படுத்தி வைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டம், மாநகர், நகரம், சிறப்பு ஒன்றிய ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற்று இருக்கிறது. இந்த செயலி தொடங்கி மூன்று நாட்களிலேயே 50 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள்.
விஜய் பதிவு:
தற்போது உறுப்பினர்கள் சேர்க்கையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் சோசியல் மீடியாவில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.