தமிழில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ரேனிகுண்டா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சஞ்சனா சிங். அதன் பின்னர் இவர் அஞ்சான், கோ, மீகாமன், அசுரவதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை இவர் 16 படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீப காலமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சஞ்சனா ஒரு சில படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
தற்போது நடிகை சஞ்சனா சிங் உடுக்கை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உடுக்கை படத்தின் இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சமூகவலைதள பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. உடுக்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகம் ஆக இருந்தார் பாலமித்ரன். இவர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமாகியுள்ளார்.
உடுக்கை படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் பாலமித்ரன் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை தந்துள்ளது. அறிமுக இயக்குனர் பாலமித்ரன் மறைவை உடுக்கை படத்தில் நடித்துள்ள சஞ்சனா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய உடுக்கை பட இயக்குநர் மரணமடைந்த செய்தி கேட்டு நான் அதிர்ந்து போனேன். அவர் மிகவும் இனிமையான மனிதர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்து உள்ளார். பால மித்ரனின் உடல் அவரது சொந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அதேபோல் பாலிவுட் சின்னத்திரை நடிகர்கள் மன்மீத் கெர்வால் பொருளாதார நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.