தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருந்த படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களுடைய வறுமையையும் கொடூரத்தையும் மிகுந்த வலியோடு இயக்குனர் இந்த படத்தில் காண்பித்து இருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

மேலும், இந்த படத்தில் சிவனந்தனாக நாயகனாக வாழ்ந்தவர் பொன்வேல். இவரின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று இருந்தது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
வாழை படம் வெளியானதிலிருந்து தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. தொடர்ச்சியாக விருதுகள் வாங்குவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழை படத்தில் நடித்த சிவனந்தன் தானே என்று கேட்டு எல்லோருமே போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். நான் சினிமாவெல்லாம் பார்க்க மாட்டேன். ஸ்போர்ட்ஸ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், மாரி செல்வராஜ் சாரால் நான் சினிமாவுக்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
பொன்வேல் பேட்டி:
நான் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன். யாரிடமும் சரியாக பேசக்கூட மாட்டேன். டேய் எப்படிடா கேமரா முன்னாடி பயம் இல்லாமல் ரியலா நடிச்ச என்று என்னை மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த எல்லோரையுமே கேட்கிற அளவுக்கு மாரி செல்வராஜ் எங்களுடைய திறமையை வெளிக் கொண்டு வந்தார். எல்லாப் புகழும் அவருக்கு தான் போய் சேரும். நான் இப்போது 12ஆம் வகுப்பு காமர்ஸ் குரூப் படித்து கொண்டிருக்கிறேன். நல்ல மார்க் எடுக்கணும்னு படிப்பில் தான் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரே வருத்தம் தான் பூங்கொடி டீச்சரை பார்க்க முடியவில்லை.

படம் பற்றி சொன்னது:
நிகிலா விமல் மேடம் ரொம்ப அன்பாக பழகுவார்கள். நான் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் எங்க ஸ்கூலில் ஃபுல் சப்போர்ட் கொடுத்தார்கள். படத்தில் மட்டும் இல்லை ரியல் லைஃபிலும் நல்லா தான் படிப்பேன். என்னுடைய ஃபேவரட் சப்ஜெக்ட் தமிழ். படித்ததும் சட்டுனு மனதில் பதிந்து விடும். வாழை படம் மாதிரியே நாங்களும் ரொம்ப எளிமையான குடும்பம் தான். எனக்கு ரெண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். நானுமே தார் சுமந்து இருக்கிறேன். ஒரு தாருக்கு 10 ரூபாய் என்றால் 20வது தாருக்கு 200 ரூபாய் கிடைக்கும்.
நம்மை எவ்வளவு வேணாலும் தூக்கிக் கொள்ளலாம். நம்ம தூக்குவதை பொறுத்து காசு தருவார்கள்.
மாரி செல்வராஜ் பற்றி சொன்னது:
வீட்டில் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், எங்க மூணு பேரையுமே அப்பா தனியார் பள்ளியில் தான் படிக்க வைத்தார். அப்பாவோட சூழலை புரிந்து கொண்டு செலவுக்கு எதுவும் காசு கேட்க மாட்டோம். நானே வாழைத்தாரை சுமந்து காசை வைத்து டிரஸ் எல்லாம் வாங்கிக் கொள்ளுவேன். வாழை படத்தில் நடித்த பிறகுதான் அம்மாவோட கஷ்டத்தை எல்லாம் புரிந்து கொண்டேன். மாரி செல்வராஜ் சார் எல்லோரிடமும் அன்பாக பழகுவார். அவர் மட்டும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுக்காமல் இருந்திருந்தால் என்னோட திறமை வெளியே தெரியாமல் போயிருக்கும். ஷூட்டிங் எல்லாம் முடிந்ததும் எல்லோரும் சேர்ந்து ஒன்னாதான் படத்தை பார்த்தோம்.

பொன்வேல் கனவு:
என்னுடன் நடிப்பை பார்த்து மாரி செல்வராஜ் சார் ஷாக் ஆகி பாராட்டினார். எல்லோரையும் ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். படத்தில் எல்லா சீனையும் நல்லா பண்ணிட்டேன். ஆனால், டான்ஸ் மட்டும் எனக்கு சுத்தமா வராது. ஆனாலும் எனக்கு ஏத்த மாதிரி எளிமையான ஸ்டெப் சொல்லித் தந்தார்கள். வாழை படத்துக்கு பிறகு எனக்கு சினிமாவில் வாய்ப்பு வரவில்லை. வந்தால் கண்டிப்பாக பண்ணுவேன். மாரி சார் என்னை பிளஸ் டூ முடித்ததும் காலேஜ் படிக்க சென்னை வர சொல்லி இருக்கிறார். எங்க படிப்பு மேல ரொம்ப அக்கறையோட இருப்பார். அவரோட ஊக்கத்தால் தான் பிளஸ் டூ முடித்ததும் சென்னையில் விஸ்காம் படிக்கலாம் என்று இருக்கிறேன். என்னுடைய எதிர்காலம் சினிமாதான் என்று கூறியிருக்கிறார்.






