இயக்குனர் விக்னேஷ் சிவன் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி கடுமையாக விமர்சித்திருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சினிமா மட்டுமில்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், புதுச்சேரி சென்று இருந்தார். அங்கு புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற அவர், அங்கு சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘ சீகில்ஸ்’ ஹோட்டலை விலை கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதைக் கேட்டு ஷாக்கான அமைச்சர், அது அரசு சொத்து அதை எல்லாம் விற்க முடியாது என்று கூறி இருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன், ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என்று கேட்டிருக்கிறார்.
புதுச்சேரியில் விக்னேஷ் சிவன் :
அதற்கு அமைச்சர், புதுச்சேரி அரசினுடைய சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். அப்படியெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது என்று கூறியிருக்கிறார். உடனே விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் கடற்கரைப் பகுதிகள் சில தனியார் வசம் இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமைச்சர், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு டெண்டர் போடப்பட்டு எழுத்தின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
அரசு சொத்தையே விலைக்கு கேட்டார் :
அதற்குப்பின் விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கலை நிகழ்ச்சி நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா என்று அமைச்சரிடம் கேட்க, அவர் புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டி வைத்திருக்கிறோம். அதில் சுமார் 4000 பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். அதற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை ஜிஎஸ்டி உடன் சேர்த்து செலுத்தினாலே போதும் என்று கூறியிருக்கிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலானது.
வலைப்பேச்சு பிஸ்மி :
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் இந்த நிகழ்வு குறித்து விமர்சித்திருக்கிறார். அதில், விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரிக்கு போய் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்ட விவகாரத்தை பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் தோணுகிறது. விக்னேஷ் சிவன் கிட்ட நயன்தாரா புருஷன் என்கிற அடிப்படையில் நிறைய பணம் இருக்கிறது. அதை பல தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதெல்லாம் தப்பு கிடையாது. ஏனென்றால், சினிமா கடைசி வரைக்கும் உங்களுக்கு சோறு போடும் என்று சொல்ல முடியாது. ஒரு கட்டத்துல உங்களை சக்கை மாதிரி தூக்கி வெளியே போட்டு விடும்.
விக்னேஷ் சிவன் முட்டாளாக இருக்கிறார் :
அது எல்லாருக்கும் நடக்கும் உங்களுக்கும் நடக்கும். அதனால் உஷாராக முதலிலே பல்வேறு தொழில்களில் முதலீடு பண்ணனும் நினைக்கிறது வரவேற்கிறோம். ஆனால், அரசாங்கத்தின் சொத்தை தான் வாங்க வேண்டும் என்று நினைப்பதை விட ஒரு முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனத்தை நயன்தாராவின் புருஷன் விக்னேஷ் சிவன் செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். அரசு சொத்தை தனி நபர் விலைக்கு வாங்க முடியாது என்கிற உண்மை எதார்த்தம் கூட புரியாத ஒரு முட்டாளாக விக்னேஷ் சிவன் இருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன் என்று விமர்சித்திருக்கிறார்.