தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டதற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார்.
விஜய் அரசியல்:
இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. இது தொடர்பாக விஜய் அவர்கள் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், இதனை கொண்டாடும் விதமாக பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தவெக நடத்திய விழா:
அந்த வகையில் மதுரை அழகர் கோவில் மாத்தூர் விளக்கில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார். இது குறித்த செய்தி தான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வெளியாகியிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் கட்சி நடத்திய விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டதற்கான பின்னணி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிவாசல் படம்:
தற்போது வெற்றிமாறன் அவர்கள் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் எடுக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் தான் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மேலும், இயக்குனர் அருணின் கல்யாணத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் மதுரை வந்திருக்கிறார். இதை அறிந்த தவெக தொண்டர்கள் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் சென்ற காரணம்:
வெற்றிமாறன் அந்த விழாவிற்கு சென்றதற்கு காரணம், வாடிவாசல் படத்திற்காக மாடுகளை அவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். இதனால் மாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தான் இவர் இந்த விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னரே வெற்றிமாறன், மாடுகள் சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் நான் வருகிறேன் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மொத்தம் மூன்று ரவுண்டுகள் நடந்தது. இரண்டு ரவுண்டுகளை அவர் கூர்மையாக கவனித்து விட்டு கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது.