அஜித் தொடர்பாக தன்னைக் குறித்த கிண்டல் கேலிகளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

கடைசியாக இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குவதாக இருந்தது.
விக்னேஷ் சிவன் குறித்த தகவல்:
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. இதை அடுத்து இவர் தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அஜித் குறித்து விக்னேஷ் சிவன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு நிகழ்ச்சியில் அஜித் குறித்து விக்னேஷ் சிவன், என்னை அறிந்தால் படத்துக்கு நான் ஒரு பாட்டு எழுதி இருந்தேன்.

அஜித் குறித்து சொன்னது:
அப்போதுதான் அஜித் சாரை சந்தித்தேன். அப்போது அவர், நான் நிறைய படம் பார்க்க மாட்டேன். ஆனால், நானும் ரவுடிதான் படத்தை பலமுறை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. குறிப்பாக, பார்த்திபன் கதாபாத்திரம் நன்றாக இருக்கு. அது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. நாம படம் பண்ணலாம் என்று சொன்னதாக கூறியிருந்தார். இதை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இருக்கிறார்கள். காரணம், என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 2015 வெளியாகியிருந்தது.
நெட்டிசன்கள் ட்ரோல்:
நானும் ரவுடிதான் படம் அக்டோபர் 2015 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும்போது அஜித் சார் எப்படி பாராட்டி இருப்பார் என்றெல்லாம் கிண்டல் கேலி செய்திருந்தார்கள். இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் விக்னேஷ் சிவன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்சில் நடந்த நிகழ்ச்சி தான் அது. அங்கு நிறைய இயக்குனர்கள் இருந்தார்கள். அப்போது நான், என்னை அறிந்தால் படத்தில் அஜித் சாரை சந்தித்தேன். அதற்கு பிறகு விஸ்வாசம் படத்தின் போது தான் அவரை மீண்டும் சந்தித்தேன்.

விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்:
ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. அப்போதுதான் அவர், நானும் ரவுடிதான் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். அதை தான் அங்கு சொல்ல வந்தேன். அங்கு மிகப்பெரிய இயக்குனர்கள் எல்லாம் இருந்ததால் தான் என்னால் விவரமாக சொல்ல முடியவில்லை. தயவுசெய்து கேலி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் பதிவு தான் வைரலாக்கப்பட்டு வருகிறது.






