டிராகன் பட விழாவில் சிம்பு குறித்து விக்னேஷ் சிவன் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘லவ் டுடே’.
இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
ட்ராகன் படம்:
இதை அடுத்து இவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கியிருக்கும் ‘டிராகன் திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படம் வருகின்ற 21 ஆம் தேதி வெளியாகும் நிலையில், சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும், இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பட குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
விழாவில் விக்னேஷ் சிவன்:
இந்நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், இந்த விழாவில் என்னுடைய நண்பர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். பிரதீப் கூட நாங்களும் ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அவரை நான் ஷார்ட் பிலிம்யில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையோட கடினமான சூழலில் இருக்கும் போது தான் பிரதீப்புக்கு கால் பண்ணி படம் பண்ணலாமா? என்று கேட்டேன். அந்த சமயத்தில் நாங்க மீட் பண்ணி கதை சொல்லி உருவான படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.
பிரதீப் குறித்து சொன்னது:
நடிகர்களோட நடிப்பை வைத்து தான் நாம் அவர்களை கொண்டாடுவோம். அவர்கள் எப்படியான படம் பண்றாங்க என்று அவர்களை நாம் ரசிப்போம். ஆனால், இன்னொரு பக்கம் அவர்கள் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று பார்க்காமல் பின் தொடர்ந்து வருவோம். ஆனால், அவர்களுடைய நடிப்பை, மேனரிசத்தை பார்த்து அவர்களுக்கு ரசிகராகவே மாறி இருப்போம். நிறைய ரசிகர்கள் சேரும் போது தான் அந்த நடிகர் ஸ்டாராக மாறுகிறார். அதே போல் தான் பிரதீப் ஒரு ஸ்டார் மெட்டீரியல் என்று ஃபீல் பண்ணுகிறேன். அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
சிம்பு பற்றி சொன்னது:
மேலும், நான் பாடல் வரிகள் எழுதும் போது என்னுடைய மனசிலிருந்து எழுதுவேன். போடா போடி படத்துக்கு அய்யோ மாட்டிகிட்டேன்னு ஒரு பாடல் எழுதி இருந்தேன். அந்த பாடல் பண்ணியும் ஒரு வருடத்திற்கு சூட் பண்ணவே இல்லை. உடனே சிம்பு சார், டேய் விக்கி வரிகளை பார்த்து எழுது என்று நகைச்சுவையாக சொன்னார். அதற்கு பிறகு ‘எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்’ என்ற பாடலை எழுதினேன். அந்த பாடலுக்கு பிறகு எனக்கு படங்கள் அதிகமாக கிடைத்தது. என்னை தொடர்ந்து லிரிக்ஸ் எழுத வைக்கிற இயக்குனர்களுக்கு ரொம்ப நன்றி என்று கூறியிருக்கிறார்.