தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். விஜய் ஆண்டனி அவர்கள் ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார்.
கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த ‘கொலைகாரன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தான் சினிமா வாழ்க்கையில் நுழைந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, நான் சென்னைக்கு போய் பாடகராக ஆகப்போகிறேன் என்று நினைத்தவுடன் என் மனதிற்குள் ஒரு சந்தோசம்.
சென்னைக்கு போக வீட்டில் அம்மாவிடம் அனுமதி கேட்டேன். முதலில் அம்மா பயந்தார்கள். என்னை அவர்கள் அரசாங்க அதிகாரியாக ஆக வேண்டும் என்று நினைத்தார்கள். எனக்கு இசையில் தான் அதிக ஆர்வமாக உள்ளது. நான் சென்னைக்கு போய் கண்டிப்பாக பெரிய ஆளாக ஆகுவேன் என்று போராடினேன். ஆனாலும், அம்மா விடவில்லை. பின் நான் எங்க அம்மாவை சமாதானப்படுத்தி சென்னையில் படிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். கல்லுரியில் படித்து கொண்டே என்னோட கனவுக்காக நான் வெளியில் போய் தொழில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சென்னையில் வந்த ஆரம்பத்தில் எப்படி பாடகராக வேண்டும் என்று எதுவுமே தெரியாது.
அப்ப என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் தான் சவுண்ட் என்ஜினியர் வேலைக்கு சேர்ந்தேன். நான் முதன்முதலாக வாங்கின சம்பளம் 600 ரூபாய். பார்ட் டைம்ல வேலை செய்து கொண்டே படித்தேன். காலேஜ் முடிஞ்சவுடனே ஸ்டுடியோவுக்கு போய் விடுவேன். நைட் வேலை முடிய வேலை முடிய 2 மணி ஆயிடும். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தான் தூங்குவேன். முதலில் எந்த ஒரு வாகன வசதியும் கிடையாது. நடந்து தான் போவேன். மேலும், எனக்கு இசையின் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் முயற்சி செய்து எல்லாம் கற்று கொண்டேன். பிறகு சம்பாதித்த பணத்தை வைத்து இசைக்கருவிகளை வாங்கினேன் அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தேன்.
முதலில் நான் நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் சந்தித்தேன். ஆரம்பத்தில் யாருக்கும் அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைக்காது. பல கஷ்டங்களுக்கு பிறகு தான் நான் இன்று இசைக் கலைஞராகவும், நடிகராகவும் உள்ளேன் என்று கூறினார். தற்போது இவர் அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி என படங்களில் நடித்து வருகிறார்.