தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். விஜய் படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்று தான். அதிலும் சமீபத்தில் தீபாவளி திருநாளன்று வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் வெளியான இந்த படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று பல ரசிகர்ககளும் அதிகாலையே தியேட்டருக்கு சென்ற வண்ணம் இருந்தனர். அப்படி புஞ்சைபுளியம்பட்டி அருகே சர்கார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய விஜய் ரசிகர்கள் 2 பேர் புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த விபத்தில் இறந்துள்ளனர்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார். அவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 18). கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவருடைய மகன் சித்திக் (18). கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று முதல் காட்சியிலேயே விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க முடிவு செய்தார்கள்.புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு தியேட்டரில் காலை 6 மணி காட்சி பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பும் வழியில் எதிரே வந்த லாரி மோதி இருவரும் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.