விஜய்யின் கட்சி கொடிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். கடந்த சில தினங்களாகவே விஜய் கட்சி கொடி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.

இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள்.
விஜய் அரசியல்:
இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்து இருந்தார் என்று கூறப்பட்டது. அதோடு பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5000 பேர்களை வைத்து கட்சி கொடியை ஏற்ற போலீசாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்ததால், விஜய், தன் கட்சி அலுவலகத்தில் 250- 300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற முடிவு செய்து இருந்தார்.

கட்சி கொடி அறிவித்தல்:
பின் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை ஏற்றியிருக்கிறார். கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருக்கிறார். அந்த கொடியில் வாகை மலரும், இரு பக்கங்களில் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பின் மேடையில் விஜய், இதை நான் கட்சிக்கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான கொடியாகவும் பார்க்கிறேன்.
https://www.youtube.com/live/HTOyKbPn4Bw
கொடி குறித்து விஜய் சொன்னது:
நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். புயலுக்கு பின் ஒரு அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் என்பது போல நம் ஒரு கொடிக்கு பின்னும் ஒரு வரலாறு, ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதை நான் கூடிய விரைவில் உங்களிடம் சொல்வேன் என்று கூறியிருக்கிறார். இப்படி விஜய் சொன்னதை தொடர்ந்து எல்லோருமே சோசியல் மீடியாவில் கட்சி கொடிக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை பற்றி ஆராய்கிறார்கள். அந்த வகையில், பூ பற்றி அறிவதற்கு முன்பு தமிழ் இலக்கணத்தில் உள்ள "புறப்பொருள் இலக்கணம்" பற்றி அறிந்து அதன் மூலம் பூக்கள் பற்றி அறியலாம் .
விஜய் சொன்ன ரகசியம்:
புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒருகுறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடைமுதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறு அன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு.
புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள் அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன. பின்வரும் புறத்திணைகள் யாவும் பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையே.
புறப்பொருள் திணைகள்:
வெட்சித்திணை
பழைய காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.
கரந்தைத்திணை
பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.
வஞ்சித்திணை
பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்தநாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும். வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
காஞ்சித்திணை
படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித்திணை எனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.
நொச்சித்திணை
பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித்திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச்செல்வான்.
உழிஞைத்திணை
பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத்திணை எனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.
தும்பைத்திணை
பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத்திணை எனப்படும்.தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

வாகைத்திணை
போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள். இதைதான் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி கொடியின் ரகசியமாக கூறியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விஜய் சொல்லும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.






