புதிய அரசியல் அதிகார பார்வை 2026-ல் உருவாக்குவோம் – கட்சி தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட கடிதம்

0
153
- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக விஜய் வெளியிட்டு இருக்கும்
அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் மத்தியில் தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக விஜய் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.

விஜய் அறிக்கை:

இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்.
கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.

-விளம்பரம்-

மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான், கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.
இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம். குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம்.

தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது. மக்களரசியல் மட்டுமே தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான், நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும்.

அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல். இந்த வேளையில், கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பணி வாயிலாக, நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு வீடு விடாமல், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும், உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, நமது வலிமையை நாட்டுக்குப் பறைசாற்றி, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம்.

அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும்.
மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான், தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி. 1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர். 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது, இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான்.

அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே. இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர். தோழர்களே, தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம். நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம். வெற்றி நிச்சயம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement