மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சினிமா திகழ்கிறது. தமிழ்சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், விஜய், அஜித் என்று பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படங்களைப் பார்த்திருப்போம். அந்த வரிசையில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது பல படங்களில் விஜய் சேதுபதி பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். மேலும், இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாள். இந்த நிலையில் இவரைப் பற்றிய தெரியாத பல விஷயங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நா. முத்துசாமியின் பட்டறையில் விஜய் சேதுபதி கணக்காளராக இருந்து நாடகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக குவைத்திற்கு வேலைக்கு போனார். அங்கேயும் மன திருப்தியுடன் வேலை செய்ய முடியவில்லை என்பதால் மீண்டும் தமிழகம் வந்தார்.
குவைத்தில் இருந்து திரும்பிய விஜய் சேதுபதி:
பின் தமிழகம் வந்த உடனே விஜய் சேதுபதிக்கு காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டார். மேலும், சினிமாவில் நடித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இவர் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் குறும் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அதற்குப்பிறகு 2000 ஆண்டுகளில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவரை நடிகராக தான் பார்த்திருப்போம். ஆனால், பல படங்களில் இவர் யாருக்கும் தெரியாத வகையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடிகுழு வீரர்களில் வலிப்பு வந்து சுருண்டு விழுவார், நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக் நண்பராக வந்து போவார்.
விஜய் சேதுபதி நடித்த படங்கள்:
பலே பாண்டியா, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்று பல படங்களில் கிடைத்த சின்ன சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாது. அதற்குப் பிறகுதான் விஜய் சேதுபதி தன்னுடைய விடா முயற்சியினாலும் தன்னம்பிக்கையாலும் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவகாற்று என்ற படத்தில் நாயகனாக நடித்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனை தொடர்ந்து தான் விஜய் சேதுபதியின் மீது தமிழ் சினிமாவின் பார்வை விழுந்தது. அதற்கு பிறகு சுந்தரபாண்டியனின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வந்தார். பின் கிடைத்த சின்னச் சின்ன கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
நடிகனுக்கு முன் உதாரணம் விஜய் சேதுபதி:
பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சாவில் ஹீரோவாக நடித்து மீண்டும் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். அதனைத்தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவருடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மக்கள் மத்தியில் எளிதாக கவர வைத்தது. மேலும், குமாரசாமியின் சூதுகவ்வும் படத்தில் ஒரு தாதாவாக மக்களை கவர்ந்து இருப்பார். ஒரு ஹீரோ நரைத்த தலையோடு தொந்தியும் தொப்பையுமாக கூட படத்தில் நடித்து ஹிட் கொடுக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக விஜய் சேதுபதி இருந்தார்.
மக்கள் நாயகனான விஜய் சேதுபதி:
இந்த படத்தில் இவருடைய நடிப்பு திரையரங்கில் கைதட்டல் மூலம் அதிரவைத்தது. இப்படியே இவர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சில படங்கள் சறுக்கலை தந்தாலும் பல படங்களில் வெற்றி நாயகனாக திகழ்ந்தார். இதுவரை தமிழ் சினிமா உலகில் ஹீரோக்கள் நடிக்க தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார். மேலும், ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கணும் என்ற கட்டுப்பாட்டை தகர்த்தெரிந்து ஒரு நடிகன் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம், எந்த கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தலாம் என்பதற்கு முன் உதாரணமாக விஜய் சேதுபதி திகழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட கலைஞனின் பிறந்த நாள் இன்று. மக்கள் செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சோசியல் மீடியா முழுவதும் மக்கள் செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மழை பொழிந்து வருகிறது.