தமிழ் திரையுலகில் 2009-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி வெளி வந்த திரைப்படம் ‘பசங்க’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இது தான் இயக்குநராக பாண்டிராஜிற்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரும், நடிகருமான சசிக்குமார் இப்படத்தினை தனது ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார். இதில் கிஷோர், ஸ்ரீ ராம், விமல், வேகா தமோதியா, பாண்டியன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. கடந்த மே 1-ஆம் தேதியோடு இப்படம் வெளி வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது குறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#11YearsOfPasanga’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டது. தற்போது, இது தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில் “முதலில் இந்த படத்துல விமல் நடிச்ச கதாபாத்திரத்துல நடிக்க ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் ஆடிஷனுக்கு வந்தார்.
அவர் நல்லா தான் நடிச்சார். ஆனா, எனக்கு இன்னும் சின்ன பையனா வேண்டும்னு சொன்னேன். உடனே, அவர் விமலை பற்றி சொல்லி அனுப்பி வைத்தார். பின், விமல் கிளீன் ஷேவ் பண்ணிட்டு வந்திருந்தார், அதுனால அவரை நான் செலக்ட் பண்ணல. அப்புறமா, விமல் மீசை, தாடி வச்சுட்டு நடிச்ச ஒரு விளம்பர படத்தை பார்த்தேன். அதுக்கப்புறம் தான் விமல் கூத்துப் பட்டறையில் பெண் வேடமிட்டு நடிப்பதற்காக கிளீன் ஷேவ் பண்ணியிருந்தார்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
பின், அவரை அழைத்து மீசை, தாடி வளர்க்க சொல்லி படத்துல
கமிட் பண்ணோம். அதன் பிறகு ஜீவாங்குற வில்லன் ரோல்ல நடிக்க முதல்ல என்னோட சாய்ஸா இருந்தது பிரபல நடிகர் நாசர் சாரின் மகன் அபிஹசன் தான். நாசர் சாரையும் சந்திச்சு பேசுனேன். அவர் எதுவும் பாசிட்டிவா பதிலே சொல்லல. அதன் பிறகு அன்புக்கரசு கேரக்டர்ல கிஷோரும், ஜீவா கேரக்டர்ல ஸ்ரீ ராமும் கமிட்டானாங்க.
இந்த படத்தின் போது ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் குறித்து பேசுகையில் இந்தப் படத்துல நான் கமிட் ஆனதுல இருந்தே என் அப்பா ரொம்ப சீரியஸா இருந்தார். எப்போ வேணாலும் உயிர் பிரியலாம்ங்கிற ஸ்டேஜ்ல இருந்தார். ஒவ்வொரு நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதும் இன்னைக்கு அப்பா இருப்பாரோ இல்லையோனு ஒரு பயமும் பதற்றமும் மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கும். இந்தப் படத்துடைய இன்டர்வெல் சீன் எடுக்கும்போது என் அப்பா இறந்துட்டார்னு போன் வந்தது. வீட்டுக்கு ஓடினேன். உடனே சசி சார், சமுத்திரக்கனி அண்ணன்னு எல்லோரும் விஷயம் தெரிஞ்சி வந்துட்டாங்க. படத்துடைய மொத்த யூனிட்டும் எங்க வீட்டுக்கு வந்துடுச்சு. என் அப்பாவுக்கு தேர் கட்டுனதே ‘பசங்க’ படத்துடைய ஆர்ட் டைரக்ஷன் டீம்தான் என்று உருக்கமுடன் கூறியுள்ளார் பாண்டிராஜ்.