தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காந்தி டாக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, அதிதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மௌன படமாக வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ விஜய் சேதுபதி மும்பை நகரத்தில் பரபரப்பாக இருக்கும் ஏரியாவில் வசிக்கிறார். இவர் ரொம்பவே வறுமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய அம்மா உடல்நிலை சரியில்லாமல் மோசமான நிலையில் இருக்கிறார். இதனால் தன்னுடைய அம்மாவை கவனித்துக் கொள்வதற்காக இவர் வேலை தேடி அலைகிறார். இவரின் வீட்டிற்கு எதிரியில் தான் ஹீரோயினி அதிதி ராவ் இருக்கிறார். இருவருமே காதலிக்கிறார்கள்.
இருந்தாலும் அதிதி வீட்டில் மாப்பிள்ளை தேடி அலைகிறார்கள். இன்னொரு பக்கம் மிகப்பெரிய பணக்காரராக அரவிந்த்சாமி இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு வாழ்க்கையின் மீது நிம்மதியும் ஆசையும் இல்லை. பின் ஒரு விபத்தில் அரவிந்த்சாமி தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் இழந்து நிர்கதியாக நிற்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி- அரவிந்த்சாமி இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். இது இருவரின் வாழ்விலும் சில மாற்றங்களை நடத்துகிறது. அதற்கு பிறகு நடப்பவை தான் படத்தினுடைய மீதி கதை.

வசனங்களே இல்லாமல் மௌனத்தின் மூலம் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருப்பது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம். மும்பை போன்ற ஒரு இரைச்சலான மிகப்பெரிய நகரத்தில் ஒருவேளை சோற்றுக்கு
ஏங்கும் ஹீரோ, கோடிகளில் புரளும் .பணக்காரர் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை பற்றி சொல்வது தான் படத்தின் மீதி கதை. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இதுபோன்று மௌன படங்கள் வந்திருக்கிறது.
வசனம் இல்லை என்றாலே ஒரு படத்தில் நடிப்பது கத்தி மேல நடப்பது தான். விஜய் சேதுபதி அசால்டாக அதை செய்து முடித்திருக்கிறார். தன் தாயை காப்பாற்றவும், காதலியை கரம் பிடிக்கவும் விஜய் சேதுபதி கொடுத்திருக்கும் முக பாவனைகள் எல்லாமே அற்புதம். இவரை அடுத்து அரவிந்த்சாமி பணக்காரனுக்கான தோற்றத்தில் மிரட்டி இருக்கிறார். தேவதையாக அதிதி படம் முழுக்க வந்து சென்றிருக்கிறார். வசனம் இல்லாத படத்தில் இன்னொரு கதாபாத்திரம் என்றால் இசைதான்.

ஏ ஆர் ரகுமான் தன்னுடைய பின்னணி இசையின் மூலம் படத்தை மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கிறார்
ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய இசையின் மூலம் ரகுமான் கொண்டு சென்றிருப்பது சிறப்பான விஷயம். பணம் மனிதனை எப்படி எல்லாம் ஆட்டி படைக்கிறது என்பதை இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. முதல் பாதி சிறப்பாக சென்றிருக்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்கள் நெருடலாக இருந்தாலும் உணர்வுபூர்வமான காட்சிகள் பார்வையாளர்களை எங்கும் நகராமல் வைத்திருக்கிறது.
கமர்சியல் மசாலா படங்களை விரும்புவதற்கு இந்த படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். லஞ்சம், பணம், பேராசை என்று பணத்தை சுற்றி நகரும் அரசியலை வசனம் இல்லாமல் இயக்குனர் சொல்லி இருக்கிறார். குறிப்பாக
ஏழை பணக்காரனுக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மிக ஆழமான கருத்தின் மூலம் சொல்லியிருப்பது மிகப்பெரிய சிறப்பு. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் காந்தி டாக்ஸ் இருக்கிறது
நிறை:
கதைக்களம் அருமை
பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடிப்பு அட்டகாசம்
வசனங்கள் இல்லாமல் இயக்குனர் படத்தை கொடுத்தது பாராட்டுக்குரிய விஷயம்
முதல் பாதி நன்றாக இருக்கிறது

குறை:
இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சலிப்பை அடைய வைத்திருக்கிறது
வசனம் இல்லாததால் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பாக இருக்கிறது
சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்
மொத்தத்தில் காந்தி டாக்ஸ் - மௌனம் மொழி






