நடிகர் விவேக் வசித்து வந்த தெருவிற்கு அவரது பெயரை வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.மேலும், இவர் நடிகராகவும் சில படங்களில் நடித்திருந்தார். இவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்கள் முதல் தற்போதிருக்கும் இளம் நடிகர்கள் வரை என பல பேருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இவர் சினிமாவை தாண்டி பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவர் சுற்றுச் சூழலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர்.அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது.
விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் :
ஆனால், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் தான் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முதல்வரிடன் விவேக் மனைவி கோரிக்கை :
இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வைத்து இருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, நடிகர் விவேக் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்க்காக விவேக் பசுமை இயக்க நிர்வாகிகள் செல் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.
அரசு ஆணைபடி மாற்றப்பட்ட பெயர் :
தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என்ற எதிர்ப்பார்பில் ரசிகர்களும் விவேக் குடும்பத்தினரும் எதிர்பார்த்து வந்தனர். 1 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்ட மறைந்த நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். அப்படியொரு நடிகரான விவேக் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என கொடுத்த மனுவை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டார்.
கலங்கிய மகள்கள் :
அதன் பெயரில் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இன்று அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவேக் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். தன் தந்தையின் பெயர் பலகையை கண்டு விவேக் மகள்கள் இருவரும் கண் கலங்கி கைகூப்பி வணங்கினர்.