தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. தற்போது யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் படம் போட்(Boat). இந்த படத்தை பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சாம்ஸ், சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர், கௌரி கிஷான் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் போட் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் 1943 ஆம் ஆண்டு நடக்கும் கதையை காண்பிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் சுதந்திரப் போராட்டம் நடக்கிறது. இதற்கிடையில் கடற்கரை அருகில் உள்ள முகாமை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அந்த வகையில் அந்த முகாமை நோக்கி ஜப்பானிய விமானப்படை, குண்டு கொண்டு வந்து போடப் போவதாக தகவல் வருகிறது.
இதனால் பலருமே பயத்தில் இருக்கிறார்கள். அப்போது அங்கு இருக்கும் ஹீரோ யோகி பாபு படகில் ஏறி கடலுக்குள் சென்று விட்டால் தப்பித்து விடலாம். நிலத்தில் தான் குண்டு போடுவார்கள் என்று நினைக்கிறார். மேலும், அந்தப் படகில் யோகி பாபு உடன் சில பேரும் ஏற்கிறார்கள். படகில் யாரெல்லாம் ஏற்கிறார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? படகில் என்ன தான் நடந்தது? கடைசியில் யார் பிழைத்தார்கள்? என்பது தான் படத்தின் மீதி கதை.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமான பின்னணியை கொண்டு இயக்குனர் அமைத்திருக்கிறார். ஏற்கனவே இயக்குனர் இம்சை அரசன் படத்திலேயே இந்தியாவுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் அரச குடும்பத்துடன் சேர்ந்து செய்த பல விஷயங்களை புட்டு புட்டு வைத்திருந்தார். அதே போல் இந்த படத்திலும் 1943 ஆம் ஆண்டு நடக்கும் கதைகளைத்தான் மையமாக வைத்து கொடுத்திருக்கிறார். ஜாதி, மதம், பாகுபாடு, அரசியல் சூழலை ஆகியவற்றை வைத்து காமெடி, நையாண்டி கலந்து இயக்குனர் கொண்டு சென்றிருப்பது ரசிக்க வைத்திருக்கிறது.
யோகி பாபுவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம். அவரைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். படத்தினுடைய ஒவ்வொரு வசனங்களுமே இந்த படத்திற்கு பக்க பலம். அதுமட்டுமில்லாமல் படம் முழுக்க கடலுக்குள் படகில் நடப்பதால் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பின்னணி இசையும் வசனத்தையும் இயக்குனர் பார்த்து கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் உழைப்பு படம் பார்க்கும்போதே தெரிகிறது. படம் முழுக்க படகை சுற்றியே நகர்வதால் முதல் பாதி நன்றாக செல்கிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் சில இடங்களில் தோய்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், இயக்குனர் முடிந்தவரை சுவாரசியத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். கடைசியில் படகில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? எதற்கு வந்தார்கள்? என்பதை சுவாரசியத்துடன் காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. மேலும், சில கதாபாத்திரங்களுக்கு இன்னும் பிரபலமான நடிகர்களை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு முறை சென்று பார்க்கும் படமாக போட் இருக்கிறது.
நிறை:
யோகி பாபு நடிப்பு சிறப்பு
கதைக்களம் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம் கொடுத்திருக்கிறது
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
முதல் பாதி நன்றாக இருக்கிறது
குறை:
இரண்டாம் பாதி சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது
சில இடங்களில் சுவாரஸ்யத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்
நடிகர்களின் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் போட்- கரை கடக்க தாமதமாகிறது