பூச்சிக் கொல்லி மருந்தை மைதா மாவு என நினைத்து போண்டா போட்டு சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே எஸ்.ஆர். கண்டிகை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு சுகுமார் என்கிற மகன் இருக்கிறார். சுகுமாரனுக்கு பாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் அனைவரும் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் மக்கள் வெளியில் சென்று வருகிறார்கள். இதனால் மருமகள் பாரதி தன்னுடைய மாமனார் பெரியசாமி இடம் போண்டா செய்வதற்கு மைதா மாவு வாங்கி வர சொல்லி இருக்கிறார்.

Advertisement

இதற்காக பெரியசாமி கடைக்கு சென்று மைதா மாவு வாங்கி உள்ளார். பின் அவர் மைதா மாவுடன் தன்னுடைய மிளகாய் தோட்டத்திற்கு தேவையான பூச்சி கொல்லி மருந்தையும் வாங்கி உள்ளார். மேலும், பெரியசாமி அவர்கள் மைதா மாவு மற்றும் பூச்சி கொல்லி மருந்து ஆகிய இரண்டையும் தன் மருமகள் பாரதியிடம் கொடுத்து உள்ளார்.

பின் தன் மருமகளிடம் தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லி பெரியசாமி வெளியே சென்று விட்டார். பிறகு மருமகள் பாரதி பூச்சிக்கொல்லி மற்றும் மைதா மாவு இரண்டும் இருப்பதை கவனிக்காமல் இரண்டையும் ஒன்றாக கலந்து போண்டா செய்து இருக்கிறார். அந்த போண்டாவை தன் கணவர் சுகுமார் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோருக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு உள்ளார்.

Advertisement

போண்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பெரியசாமி குடும்பத்தில் உள்ள அனைவரையும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் பெரியசாமி குடும்பத்திற்கு சிகிச்சை அளித்தார்கள். இந்த சூழ்நிலையில் சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் மருமகள் பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

மற்ற மூன்று பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பாரதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய கவனக் குறைவு காரணமாக இளம் பெண் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement