தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படத்தில் தான்.
அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் இந்த படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ கிடைத்தது நாம் அறிந்ததே. இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர். ரகுமான் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ ஆர் ரகுமான், நான் எப்போதுமே ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை கற்றுக்கொள்ள விரும்பினேன். கான் சாப் என்னை அவருடைய குடும்பத்தில் ஒருவராக ஆக்கினார். அவர் எப்போதுமே ரொம்ப ஊக்கமளிப்பார். அவர் போன்ற சிறந்த மேஸ்ட்ரோக்கள் ஹரிஹரன், சோனு நிகாம், ஷான் போன்ற பிரபலமான இசை கலைஞர்களை உருவாக்கினார். கான்சாப்பினால் தான் நான் என்னுடைய லோ ரேஞ்ச் இசையை பயன்படுத்த கற்றுக் கொண்டேன்.
லோ ரேஞ்ச் இசை:
நான் லோ ரேஞ்ச் இசைகளை பயன்படுத்துவேன் என ஒருபோதுமே நினைத்தது கிடையாது. ஆனால், அவர் சொல்லி தந்தது எனக்கு பிற்காலத்தில் உதவியாக இருந்தது. அதற்கு நான் கான் சாப்புக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். என்னை பொருத்தவரை பாடல் வரிகள் என்பது ஜிகர்(பிராத்தனை, நினைவு)போன்றது பாடல் வரிகள் மக்களின் மனதையும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் பாதிக்கிறது என்று தான் நான் நம்புகிறேன். எதிர்மறையான பாடல் வரிகளை கொண்ட எதையுமே நான் எதிர்ப்பேன்.
மொழி பற்றி சொன்னது:
அதேபோல் மொழிகளின் எல்லைகளை நான் நம்புவது கிடையாது. அழகாக இருந்தால் நான் அதை ரசிப்பேன். தமிழர்கள் கூட பல பஞ்சாபி பாடல்களை கேட்கிறார்கள். அதேபோல் பஞ்சாபியர்களும் தமிழ் பாடல்களை கேட்கிறார்கள். ஒரு இடத்தின் கலாச்சாரத்தில் இசை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன். போதை பொருளை ஊக்குவிக்கும் பாடல்களையும் கெட்ட விஷயத்தையும் நான் எதிர்க்கிறேன்.
ஏ.ஆர். ரகுமான் சொன்ன அறிவுரை:
சில நேரங்களில் திரைப்படங்களுக்கு அந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. ஆனால், அது மட்டுமே இருக்கக் கூடாது. ஒரு முறை குடிகார கிதார் இசை கலைஞர் என்னுடைய இசையை ரொம்ப இழிவாக பேசியிருந்தார். நான் தனியாக இசையமைக்க தொடங்கியதற்கு முன்பு பல்வேறு இசைக்கலைஞர்களுக்கு இசையை வாசித்து வந்தேன். அப்போது அவர் கேட்ட கேள்வி எனக்குள் ஏழு வருடம் ஆக தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து வெளிவர முடியாமல் நான் தவித்தேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.