விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் முத்துவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் அஜய் ரத்தினம்.

இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று. இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் போலீஸ் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் மிரட்டி இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் கலக்கியிருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் கூட நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் இவர் மர்மதேசம், சித்தி, அரசி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேலாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சாதிப்பதற்கு வயது தேவை இல்லை என்பதை நடிகை அஜய் ரத்தினம் நிரூபித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிறது. அதாவது, இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் பிட்னஸுக்குமே பெயர் போனவர். மனமும் உடலும் சமமான நிலையில் இருந்தால் தான் எதையும் சரியாக செய்ய முடியும் என்பதை நம்ப கூடியவர். இவர் தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு என்று ஒதுக்கி விடுவார். இதை இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்து இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது.

அஜய் ரத்னம் சாதனை:
இருந்தாலும் பிட்னஸில் கவனமாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அளவிலான பவர் லிப்டிங் பென்சில் இவர் கலந்து கொண்டு தங்கம் வென்று இருந்தார். இதை அடுத்து இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று அதிலுமே தங்கம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக போட்ட பதிவில் அஜய் ரத்னம், கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகவும் சரியாகவும் நான் செய்த தீவிர உடற்பயிற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. இந்த பயணம் எனக்கு, வயது என்பது வெறும் எண் தான் என்பதை கற்றுக் கொடுத்துள்ளது. நான் இந்த போட்டியில் எடையை மட்டுமல்ல என்னுடைய கனவுகளையும் சுமந்து சென்றேன்.

அஜய் ரத்னம் பதிவு:
தமிழ்நாட்டின் பெயரை சுமந்து சென்றதற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். இந்த வெற்றி என்னுடையது மட்டும் கிடையாது. என் மீது நம்பிக்கை வைத்த என்னுடைய ட்ரெயினர்கள் மற்றும் என்னை வழிநடத்தியவர்கள் எல்லோருக்குமானது. ஒவ்வொரு அதிகாலையும் ஒவ்வொரு உடற்பயிற்சியும் ஒவ்வொரு தியாகமும் தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது. இது வெறும் ஒரு மைல்கல் தான். இன்னும் பல வெற்றிகள் வர இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் இந்த விடாமுயற்சியை பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






