விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுக கட்சியையும் தவறாக விமர்சிக்கிறார்கள் என்று அதிமுகவினர் போராட்டங்களை நடத்தியதை அடுத்து படத்தில் இருந்து சர்ச்சையான காட்சிகள் நீக்கபட்டது.
இந்நிலையில் சர்க்கார் படம் குறித்து, அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ராதாரவி கூறியுள்ளதாவது, சர்கார் திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த காட்சிகள் உண்மையாகிவிட்டது.அந்த காட்சிகளை தி.மு.க எதிர்க்கவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை.
அவரது பெயர் ஜெயலலிதா என்பது தான் எனக்கு தெரியும். திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் எந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை அறிய ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை திரைப்படத்தை பார்ப்பார்கள்.சர்காரை வெற்றி பெற செய்த அ.தி.மு.க.வுக்கு நன்றி என்று கூறிக்கொள்கிறேன்.
ஆளுங்கட்சியின் ஆட்சி காலம் இன்னும் 2½ ஆண்டு காலம் மீதமுள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளது.எம்.ஜி.ஆர் என்ற நடிகரால் வந்த கட்சி அ.தி.மு.க. என்பதால், நடிகர் விஜய்யின் வளர்ச்சியை கண்டு அக்கட்சியினர் பயப்படுகின்றனர். ஆனால் தி.மு.க.வுக்கு யாரையும் கண்டு பயமில்லை. ரஜினி, கமல், விஜய், என யாராக இருப்பினும் அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.