பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பி.வாசு மகன் சக்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை கொண்டவர். இவருடைய திரைப்படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றி அடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்த போதிலும் இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராக வர முடியவில்லை. ஷக்தி அவர்கள் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதன் பின் பல படங்கள் நடித்து இருக்கிறார். ஆனால், சக்திக்கு அழகும் திறமையும் இருந்தும் சினிமாவில் பட வாய்ப்புகள் சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக்தி:
அதன் பின் சக்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலே பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், பலருக்கும் அப்படி நடந்துவிடுவது இல்லை. அதேபோல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்தது.
நிகழ்ச்சிக்கு பின்:
சொல்லப்போனால் ஒரு பெரிய வில்லனாகவே இவர் மக்கள் மத்தியில் தோன்றினார். அதற்குப்பின் இவர் சில படங்களில் நடித்தார். இருந்தாலும், பெரிதாக வரவேற்க்கப்படவில்லை. அதற்குப்பின் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சக்தி, நான் சின்ன வயதிலிருந்தே தோல்வியை சந்தித்தது கிடையாது.
சக்தி பேட்டி:
எதிலும் பெயில் ஆனதும் கிடையாது. நன்றாகத்தான் நான் படித்தேன். நான் எம்பிஏ வரை படித்திருக்கிறேன். ஆனால், இந்த சினிமாத்துறைக்கு வந்த பிறகு தான் நான் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது தான் என்னுடைய வாழ்க்கையிலேயே நான் செய்த பெரிய தவறு. என்னுடைய அப்பா இந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று சொன்னார். ஆனால், நான் அதை கேட்காமல் பிடிவாதமாகப் போனேன்.
பிக் பாஸ் குறித்து சொன்னது:
நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பல பிரச்சனைகள் வந்தது. அதனால் நான் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். அப்போது நடிகர் ரஜினி சார் தான் என்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து என்னை பற்றி விசாரித்தார். என்னிடம் மீண்டும் சினிமாவிற்கு வரும்படி சொன்னார் என்று கூறியிருந்தார்.