நடிகர் சேதுராமனை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். இவர் நடிகர் மட்டுமே இல்லாமல் மருத்துவரும் ஆவார். சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார் சேது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார். மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்பால் சேதுராமன் இறந்தார். இவரின் இறப்பு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார் உமா. இந்த நிலையில் நடிகர் சேதுராமன் இறந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில் அவரின் மனைவி உமா சேதுராமன் அளித்த பேட்டியில், வெளி உலகத்துக்கு சேது உயிரோடு இல்லாத மாதிரி இருக்கலாம். ஆனால், அவர் உருவாக்கின கிளினிக், வீடு எல்லாத்திலும் உணர்வுபூர்வமாக நிறைந்து இருக்கிறார். அதனால் அவருடன் அந்த வாழ்க்கையை ஈசியாக மறந்திட முடியாது, கடந்து போகவும் முடியாது.
உமா சேதுராமன் பேட்டி:
அவருடைய மகள், மகன் இரண்டு பேருடைய எதிர்காலமும் என் கையில் இருக்கிறது. சோகத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு குழந்தைகளிடம் போலியான முகத்தை காட்டினால் கண்டுபிடித்து விடுவார்கள். அது குழந்தைகளுக்கு செய்யும் பெரிய துரோகம். ஏன்னா, நம்மை பார்த்து தான் பிள்ளைகளும் வளர்கிறார்கள். எந்த விதத்திலும் நம் சோகம் அவர்களை பாதிக்கக்கூடாது. அதற்கு ஒரே ஒரு வழி அந்த சோகத்தை வாழ்க்கையோட தன்னம்பிக்கையாக மாற்றிக் கொள்வதுதான். குறைந்த செலவில் தரமான மருத்துவம் அளிக்கணும், கிளினிக்கை பெரிய அளவில் விரிவுபடுத்தனும் என்று தான் அடிக்கடி சேது சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவை என் மூலமாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கார்.

சேதுராமன் பற்றி சொன்னது:
நாங்கள் இருவரும் சந்தித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இப்ப சந்தித்த மாதிரி தான் இருக்கிறது. எங்களுடையது அரேஞ்ச் மேரேஜ். அதனால் தான் திருமணத்திற்கு பிறகு லவ் பண்ண ஆரம்பித்தோம். நான் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். அவர் மருத்துவர். நாங்கள் இரண்டு பேருமே எங்களுடைய துறையை பற்றி நிறைய பேசிக்கொள்வோம். அவர் ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வேர்ட். எந்த விஷயமாக இருந்தாலும் நேரடியாக சொல்லிவிடுவார். அந்த குணம் தான் அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. எங்களுடைய காதலுக்கு அடையாளமாக சகானா பிறந்தார். எவ்வளவோ பிஸியாக இருந்தாலும் அவளை பார்க்காமல் தூங்க மாட்டார். மகள் தான் அவருக்கு உயிர். எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து என்னையும் கிளீனிக்கு கூட்டிட்டு போவார்.

சேதுராமன் கனவு:
அதேபோல் நான் இரண்டாவது முறை கர்ப்பமானதை கேள்விப்பட்டதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், அதற்குள் இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. டயட், எக்சசைஸ் எல்லாம் பண்ணி உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பார். அப்படி இருந்தும் இப்படி ஆனது தான் எங்களுக்கு ரொம்ப பேர்அதிர்ச்சியாக இருந்தது. அதோட நான் அவருடைய எந்த படத்தையுமே பார்த்ததில்லை. என்னை பார்க்க சொல்லியும் கட்டாயப்படுத்த மாட்டார். இப்போது கூட நான் அவரை படத்தை பார்க்கவில்லை. காரணம், பார்த்தால் நான் ரொம்ப பீல் பண்ணி விடுவேன். அதனால்தான் பார்க்காமல் இருக்கிறேன். மருத்துவமனையை விரிவுபடுத்தி நியாயமான கட்டணத்தில் தரமான ட்ரீட்மென்ட் பண்ண வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு. ரெண்டு கிளினிக் இருந்ததை மூணாவதாக கிளினிக் திறக்க முடிவு பண்ணி இருந்தோம்.

சேதுராமன் குடும்பம்:
அதுக்குள்ள தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. ஆனால், அவருடைய கனவை நிறைவேற்றுவதற்காக நாங்கள் அந்த மூன்றாவது கிளீனிக்கை ஓபன் பண்ணி சக்சஸ்ஃபுல்லா நடத்திக் கொண்டிருக்கிறோம். நினைவு நாள் வந்தா பலரும் சாமி கும்பிடுவார்கள். ஆனால், நான் கிளினிக் தான் போவேன். நானும் அவரும் கிளினிக்கில் தான் அதிக நேரம் செலவழிப்போம். அங்கு போய் உட்காரும்போது அவர் கூட இருக்கிற ஒரு சந்தோஷம் கிடைக்கும். அவர் இல்லாத இந்த இழப்பை மாமியாரும் மாமனாரும் ஒரு பெற்றோராக இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். இப்பவும் சேது வீட்டில் தான் கூட்டு குடும்பமாக இருக்கிறோம். இப்படி ஒரு நல்ல குடும்பத்துக்கு மருமகளாக வந்தது நான் செய்த பாக்கியம். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சேது எப்போதுமே இந்த கிளினிக்கில் எங்களோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று ரொம்ப எமோஷனாக பேசியிருக்கிறார்.






