தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் ஹீரோ தங்கலான் முனி, தன்னுடைய மனைவி கங்கம்மா, குழந்தை மற்றும் தன்னுடைய மக்களுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் தங்களுக்கான நிலத்தில் பயிர் செய்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்து பொறுக்காத அந்த ஊரின் உடைய மிராசு சூழ்ச்சி செய்து தங்கலானையும், அவனுடைய மக்களையும் அடிமையாக்கி தனக்கு கீழ் வேலை செய்ய வைக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து கொந்தளித்த தங்கலான் தன்னுடைய மக்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று போராடுகிறார். அப்போது தான் வெள்ளைக்காரன் கிளிமண்ட் மூலம் தங்கம் தேடும் வேலை தங்கலான் மக்களுக்கு கிடைக்கிறது. அதை செய்வதன் மூலம் அதிக சம்பளம் கிடைக்கும். அதை வைத்து தங்களுடைய நிலத்தை மீண்டும் வாங்கி விடலாம் என்று நினைத்து மக்களை தங்கம் தேடும் இடத்திற்கு வேலைக்காக தங்கலான் அழைத்து செல்கிறார்.
அதற்குப் பின் என்ன நடந்தது? தங்கம் தேடும் இடத்தில் என்னென்ன பிரச்சனை எல்லாம் எதிர்கொண்டார்கள்? கடைசியில் மிராசுகளிடமிருந்து தங்களுடைய இடத்தை மீட்டார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தின் தங்கலான் முனி கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல், நடை, நடிப்பு, வசனம் என அனைத்திலும் விக்ரம் வாழ்ந்திருக்கிறார். தங்கலானை அடக்கி ஆளும் ராணியாக கங்கம்மா கதாபாத்திரத்தில் பார்வதி மிரட்டி இருக்கிறார்.
இருவருக்கும் இடையே இருக்கும் ரொமன்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கிறது. மேலும், தங்கத்தை பாதுகாக்கும் ஆரத்தியாக மாளவிகா மிரட்டி இருக்கிறார். இவருடைய கடின உழைப்புக்கு தனி பாராட்டுக்கள் கிடைக்கிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் பாராட்டும் வகையில் இயக்குனர் ரஞ்சித் கொடுத்திருக்கிறார். நிலத்தின் மூலம் இருக்கும் அரசியலை இந்த படம் பேசி இருக்கிறது. எல்லா காலகட்டத்திலும் அரசியல் இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குனர் நிரூபித்திருக்கிறார்.
இருந்தாலும், கதைக்களத்தில் இயக்குனர் கொஞ்சம் குழப்பி இருக்கிறார். அதை தெளிவாக சொல்லி இருந்தால் படம் பெரிய அளவு ஹிட்டாக பேசப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் நடிகர்கள் பேசும் வசனங்களும் புரியவில்லை. இவர்களை தொடர்ந்து படத்தில் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அதில் யாருமே குறை சொல்லவே முடியாது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பக்கபலம் நடிகர்கள் உடைய நடிப்பு தான். சொல்லப்போனால், விக்ரமின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுத்தால் கூட பத்தாது.
அந்த அளவிற்கு உயிரை கொடுத்து இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரமை தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஜிவி பிரகாஷ் உடைய இசை தான். எங்கெல்லாம் படத்திற்கு சலிப்பு ஏற்படுகிறதோ தன்னுடைய பின்னணி இசையால் மிரட்டி இருக்கிறார். பாடல்களுமே படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம் இரண்டின் மூலம் தங்கலான் உலகிற்கே பார்வையாளர்களை கொண்டு சென்றிருக்கின்றது. ஒளிப்பதிவும், எடிட்டிங் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. மொத்தத்தில் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பிற்கு இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கிறது.
நிறை:
நடிகர், நடிகைகளின் நடிப்பு அற்புதம்
பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு எல்லாம் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
ஆடை வடிவமைப்பு, கலை, இயக்கம், எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது
கதைக்களம் அருமை
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
சில இடங்களில் நடிகர்களின் வசனம் புரியவில்லை, அதை தெளிவுபடுத்தி இருக்கலாம்
மொத்தத்தில் தங்கலான்- மக்கள் மத்தியில் மின்னுகிறார்