வெற்றிகரமான வாழ்க்கையை அழித்த திருமண உறவு, இறப்பிற்கு கூட வராத கணவர் – தேவிகாவின் நினைவு நாள் இன்று

0
708
Devika
- Advertisement -

தமிழ்த்திரை உலகில் அதிகம் பெருமையாகப் பேசப்படாத, குடத்தில் இடப்பட்ட ஒரு குத்து விளக்கைப் போல இருந்தவர் தேவிகா.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருப்பினும், இவர் தன் வாழ்வில் பெரும்பாலும் வாழ்ந்தது சென்னையில்தான். தமிழைச் சுத்தமாக உச்சரித்து நடித்த நடிகைகளில் இவர் குறிப்பிடத்தக்கவர்.1957 ஆம் ஆண்டில் நடிகர்திலகம், பானுமதி நடித்த ‘மணமகன் தேவை’ படத்தில் பானுமதியின் தங்கையாகத் தமிழ்த் திரையில் அறிமுகம் ஆனவர் தேவிகா.

-விளம்பரம்-

அதே ஆண்டில், M.A.வேணு தயாரிப்பில், SSR க்கு ஜோடியாக, முக்தா சீனிவாசன் இயக்குனராக அறிமுகமான ‘முதலாளி’ படத்தில் நாயகியாக நடித்தார்.அதன்பின்னர் சில மாதங்கள் சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக்குழுவில் பயிற்சி பெற்று, மீண்டும் திரை வாழ்க்கையைத் துவங்கியவர், பின்னர் திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லாத வேகத்தில் முன்னேறினார்.தமிழில் சுமார் 55 படங்களும், தெலுங்கில் 50 படங்களும், மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் சுமார் 10 படங்களுக்கு மேலும் நடித்தார்..

- Advertisement -

அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் மிகப் பெரிய வெற்றி பெற்றவையாக அமைந்திருந்தன. அவற்றில் நீலவானம், கர்ணன், சுமைதாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், வானம்பாடி, வாழ்க்கைப்படகு போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.பாடல்களை இவரே பாடுவதைப் போல வாயசைத்து நடிப்பது இவரது தனிச்சிறப்பு.பாடல் காட்சிகளில், பாடுவது சுசீலாவா அல்லது தேவிகாவா என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக நடித்தவர் தேவிகா.

நெஞ்சில் ஓர் ஆலயம் என்றாலே, “சொன்னது நீதானா சொல் சொல்…” பாடலில், சிதார் வாசித்தபடியே உணர்ச்சிப் பிழம்பாக அற்புதமாக நடித்த தேவிகாதான் நினைவுக்கு வருவார்…இரட்டை வேடம் ஏற்று இவர் நடித்த ‘வானம்பாடி’ படத்தின்
“கங்கைக் கரைத் தோட்டம்…” பாடலும் “தூக்கணாங்குருவிக் கூடு…” பாடலும் “ஆண்கவியை வெல்ல வந்த..” பாடலும்
தேவிகாவின் அற்புதமான நடிப்பினால் இன்றும் மனதில் நிற்கின்றன..

-விளம்பரம்-

பூர்வ ஜென்மக்கதையான நெஞ்சம் மறப்பதில்லையிலும் இவருக்கு இரண்டு பாத்திரங்கள். “நெஞ்சம் மறப்பதில்லை…அது நினைவை இழப்பதில்லை”, “அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை…” ஆகிய பாடல்களில் வந்த தேவிகாவை என்றும் நம் நெஞ்சங்கள் மறப்பதில்லை. வாழ்க்கைப்படகு படத்திலும் மிக அருமையான பாத்திரம் இவருக்கு. “ஆயிரம் பெண்மை மலரட்டுமே…” “உன்னைத்தான் நானறிவேன்..” பாடல்கள் இவரது சிறப்பான நடிப்பினால் உயிர் பெற்றவை.

இவை எல்லாம் போக, தேவிகாவின் திரை வாழ்வில் மிக மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை, நடிகர் திலகத்துடன் அவர் நடித்த 18 படங்கள். அவற்றில் 12 படங்களில் ஜோடியாகவும், 6 படங்களில் ஜோடி இல்லாத வேறு பாத்திரங்களிலும் நடித்தார். பத்மினியும், சாவித்திரியும், சரோஜாதேவியும் நடிகர்திலகம் படங்களில் இணைந்து கொடிகட்டிப் பறந்த காலத்தில், சற்றும் ஆரவாரம் இல்லாமல், சுமார் 5 ஆண்டு காலத்தில் 11 வெற்றிப்படங்களில் சிவாஜியுடன் இணைந்து அருமையாக நடித்தார்.

1961 இல் ‘பாவமன்னிப்பு’ படத்தின் மூலம் தொடங்கியது அந்த அற்புதமான பொற்காலம். மிகவும் அமைதியாகவும், அடக்கமாகவும், பாந்தமாகவும் மேரி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். உள்ளத்தை உருக்கும், ஆனால் உன்னதமான, பவித்திரமான காதல் ஜோடியாக, ரஹிமும் மேரியும் இணைந்து நடித்த ” பாலிருக்கும்… பழமிருக்கும் ..” பாடலைக் கேட்டால், பார்த்தால், கல் மனதிலும் கண்களின் ஓரத்தில் நீர் துளிக்கும்.

சென்னையின் பெருமையான அடையாளங்களில் ஒன்றாக இருந்த ‘சாந்தி’ தியேட்டரில் வெள்ளி விழா கண்ட முதல் திரைப்படம் ‘பாவமன்னிப்பு’ பின்னர், ‘பலே பாண்டியா’, ‘பந்தபாசம்’, ‘அன்னை இல்லம்’, ‘ குலமகள் ராதை’, ‘கர்ணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘முரடன் முத்து’, ‘அன்புக்கரங்கள்’, ‘சாந்தி’, ‘நீலவானம்’ என்று அந்த வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. நடிகர் திலகம் – தேவிகா கூட்டணியில் வந்த காவியப்படங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் அது அனுமார் வால் போல வளர்ந்து கொண்டே போகும்.

இந்தப் பொற்காலம் 1961 முதல் 1965 வரை.. இதே காலத்தில் வந்த ‘பழனி’ படத்தில் இருவரும் ஜோடியல்ல. தேவிகாவின் ஜோடி SSR. ‘நீலவானம்’ தான் இருவரும் இணைந்து நடித்த அந்தப் பொற்காலத்தின் இறுதிப்படம். அதன் பின்னர் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், எங்கிருந்தோ வந்தாள், பாரத விலாஸ் போன்ற படங்களில் இருவரும் நடித்திருந்தாலும் இணையாகச் சேர்ந்து நடிக்கவில்லை. பின்னர் நீண்ட நாட்கள் கழித்து, 1976 இல் வந்த ‘சத்யம்’ திரைப்படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். ஆனால் அதில் பெரியதாகக் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இவரது பாத்திரம் அந்தப்படத்தில் அமையவில்லை ..

மற்ற நடிகையரைப் போலத் தேவிகா ஒன்றும் அவ்வளவு அழகான உடற்கட்டுக் கொண்டவர் அல்ல. சிறப்பாக நடனம் ஆடும் திறமையும் உடையவர் அல்ல.. ஆனால், அவரிடமிருந்த பலமே உணர்ச்சிகளை அப்படியே வெளிக்காட்டும் முகமும், பேசும் கண்களும், படத்தில், தான் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே முழுவதுமாக மாறி விடும் அற்புதமான அவரது நடிப்புத் திறமையும் தான். அந்தச்சமயத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த முன்னணி நடிகையரை விடவும், குடும்பப் பாங்கான கதைகளில் அதிகமாக நடித்து, அந்தப் படங்களின் முழுச்சுமையையும் தன்னுடைய தோள்களில் தாங்கி நிறுத்தியவர் இவர்.

அவரது நடிப்பு, நடிப்பதைப் போல இருக்காமல் மிக மிக எதார்த்தமான ஒன்றாக இருந்தது இவரது தனிச்சிறப்பு.வேறு எந்த நடிகையிடமும் இல்லாத இன்னொரு விசேசம் தேவிகாவிடம் உண்டு. அதுதான் அவர் முகத் தோற்றம். மற்ற நடிகையர் என்னதான் வேறுபட்ட, பல்வேறு மேக்கப்களைப் போட்டுப் பல படங்களில் நடித்தாலும், அனைத்துப் படங்களிலும் அவர்கள் முகங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் இருக்கும்.

ஆனால் இவரது முகம் மட்டும் படத்துக்குப் படம் மாறுபட்டதாக இருக்கும். ஒரே வருடத்தில் நான்கு படங்களில் நடித்தாலும், ஒவ்வொன்றிலும் முகம் வேறுபட்டுத் தெரியும். ஒன்றில் நீளமாகத் தெரியும், ஒன்றில் வட்டமாகத் தெரியும், ஒன்றில் ஒட்டிய கன்னங்களுடன் காட்சி தருவார், ஒன்றில் முகம் புசு புசு என்று உப்பிய மாதிரித் தெரிவார்.. இப்படிப்பட்ட முகத் தோற்றத்தை வேறு எந்த நடிகையரிடமும் நான் கண்டதில்லை.

எந்தப் படத்தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எந்த விதமான தொல்லைகளோ, கால்சீட் பிரச்சினைகளோ ஏற்படுத்தாதவர் என்ற பெயரைப் பெற்ற சிறந்த நடிகை இவர். இவர் மற்றவர்களுக்கு உதவிதான் செய்வாரே ஒழிய எந்த விதமான உபத்திரமும் செய்யாத நல்ல பெண்மணி. இதனாலேயே, திரை உலகில் தனக்கு மிக மிகப் பிடித்த, சிறந்த ஒரு தோழி தேவிகாதான் என்று கவியரசர் கண்ணதாசனே குறிப்பிட்டிருக்கிறார். தேவிகாவின் நடிப்பின் உச்சத்தைக் கண்ட திரைப்படம் நடிகர் திலகத்துடன் இவர் இணைந்து நடித்த ‘நீலவானம்’.

தன் வயிற்றில் இருப்பது கட்டி என்பதை அறியாமல், அது தனது வயிற்றில் உருவாகி வளரும் குழந்தை என்ற எண்ணத்தில் அதை ஆசையுடன் தாலாட்டியும், பாராட்டியும், சீராட்டியும் கொஞ்சி மகிழும் கௌரி என்னும் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் தேவிகா. நடிப்பில் தேவிகா தன்னைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் என்று நடிகர் திலகமே அவரைப் புகழ்ந்த அதி அற்புதமான நடிப்பு அந்தப் படத்தில் தேவிகாவுடையது.

Kanaga

அதற்குப் பின்னர், அவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் காட்டிய அவசரமான, தவறான முடிவும், பின்னர் மணமுறிவில் முடிந்த அற்ப மணவாழ்க்கையும், அந்த அருமையான நடிகையின் வாழ்வை உருத்தெரியாமல் சிதைத்து விட்டன. இவரது இறப்பிற்கு கூட அவரது கணவர் வரவில்லை. தன் ஒரே பெண்ணான கனகாவுடன் சிறிது காலம் அமைதியாக வாழ்ந்து விட்டு, கடந்த 2002 ஆம் ஆண்டில், இதே நாளில், தன் 59 ஆவது வயதில் இந்த உலகை விட்டு மறைந்து போய் விட்டார், திரை வானில் அற்புதமாக மின்னிய அந்தத் தங்கத்தாரகை.

மே மாதத்துக்கும் தேவிகாவின் வாழ்க்கைக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு உண்டு.அவர் நடித்த முதல் தமிழ்ப்படமான ‘மணமகன் தேவை’, 1986 இல் வெளிவந்த அவரது இறுதிப்படமான ‘நானும் ஒரு தொழிலாளி’ ஆகியவை வெளிவந்தது மே மாதம்தான். அதே போல, அவரது இறுதி மூச்சு நின்றதும் மே மாதம்தான். திரை உலகம் உள்ளவரை, அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்… அவர் நடித்த பாத்திரங்கள் மூலமாக.

Advertisement