நடிகையாக வரும்போதே மூன்று மாத கைகுழந்தையுடன் நடிக்க வந்தவர், திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்தவர் சௌகார் ஜானகி.நடிகர் என்.டி.ஆர் நடித்த ‘சௌகார்’ படத்தில் அறிமுகமானார் சௌகார் ஜானகி.சௌகார் படம் 1947 ஆம் ஆண்டு வெளியானது. என்.டி.ஆரின் முதல் ஹீரோயினும் சௌகார் ஜானகிதான்.திரையுலகில் இவர் நடிக்க வந்த காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் வி.என்.ஜானகி. இவர் எம்ஜிஆரின் மனைவி. அதனால் ரசிகர்கள் ஜானகி பெயர் குழப்பத்தில் சௌகார் படத்தில் நடித்ததால் சௌகார் ஜானகி என அழைத்தனர்.
தமிழ் திரையுலகில் பல்வேறு பாத்திரங்களை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சௌகார் ஜானகி.தமிழகத்தின் 3 முதல்வர்களுடன் கலைப்பயணத்தில் இணைந்தவர் சௌகார் ஜானகி. கருணாநிதி கதை வசனத்தில் குலக்கொழுந்து படத்தில் நடித்துள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆருடன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர் என்.டி.ஆருடன் நடித்துள்ளார். என்.டி.ஆரின் முதல் கதாநாயகியே சௌகார் ஜானகிதான்.
தென் இந்தியாவின் அப்போதைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் உள்ளிட்ட அனைவருடனும் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழில் பாவேந்தர் பாரதி தாசன் வசனம் எழுதிய வளையாபதி படத்தில் அவரது வசனத்தை பேசி நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் குமுதம் படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.
சௌகார் ஜானகி தமிழில் நடித்த படங்கள் மிகவும் பிரபலமானவை. வித்தியாசமான பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். குமுதம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், பாபு, புதிய பறவை, எம்ஜிஆருடன் பணம் படைத்தவன், ஒளிவிளக்கு, ஜெமினியுடன் பாக்கியலட்சுமி காவியத்தலைவி, இருகோடுகள் உள்ளிட்ட படங்கள், கே.பாலச்சந்தரின் முதல் படமான நீர்க்குமிழியின் கதாநாயகி, தொடர்ந்து எதிர்நீச்சல், பாமாவிஜயம், ரஜினியின் தாயாராக தில்லு முல்லு, கமலுடன் சிறிய வயதாக இருக்கும்போதே பார்த்தால் பசி தீரூம் உள்ளிட்ட படங்கள் என 70 ஆண்டுகாலம் பேர் சொல்லும் பல படங்களை நடித்துள்ளார்.
காவியத்தலைவி என்கிற சொந்தப்படத்தை தயாரித்து இருவேடங்களில் நடித்தார். ஜெமினி கதாநாயகன், பாலச்சந்தர் இயக்கம். சௌகார் ஜானகி ஒளிவிளக்கு படத்தில் நடித்த, பி.சுசிலா பாடிய இறைவா உன் மாளிகையில் பாடல் பின்னர் 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல் நலமின்றி இருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா, புன்னகை மன்னன் பூவிழி கண்ணன், பார்த்த ஞாபகம் இல்லையோ, மாலைப்பொழுதின் மயக்கத்திலே,
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா, மியாவ் மியாவ் பூனைக்குட்டி, கண்போன போக்கிலே கால் போகலாமா என பிரபலங்களுடன் பிரபல பாடல்களில் நடித்துள்ளார். அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ள சௌகார் ஜானகி, நகைச்சுவையை மிகச்சாதாரணமாக நடித்துவிடுவார். எதிர்நீச்சல் தொடங்கி, தில்லு முல்லு வரை அவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
உயர்ந்த மனிதனில் உயர்ந்த இடத்தின் பெண்மணியாகவும், இரு கோடுகளில் மாவட்ட ஆட்சியராகவும், ஒளிவிளக்கு படத்தில் விதவை பெண்ணாக எம்ஜிஆரால் காப்பாற்றப்படுபவராகவும், படிக்காத மேதையில் அப்பாவி சிவாஜியின் மனைவியாகவும், எதிர்நீச்சலில் மடிசார் கட்டி நடுத்தர குடும்ப பெண்ணாகவும் அவர் நடிக்காத பாத்திரமில்லை எனலாம். திரையுலகில் தைரியமாக, எதார்த்தமாக இருந்த நடிகைகள் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரே. அதில் சௌகார் ஜானகியும் ஒருவர். அவரது நேர்மையான தைரியமான அணுகுமுறை அனைவரும் இன்றும் பேசுவர்.
திரையுலகில் தனக்கான காஸ்ட்யூமே சொந்த செலவிலும், கார் பெட்ரோல், உணவு உள்ளிட்டவற்றை சொந்தமாக செலவு செய்த ஒரே நடிகை சௌகார் ஜானகியாகத்தான் இருப்பார். தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என 3 முதல்வர்களுடன் கலைப்பயணத்தை தொடர்ந்தவர் சௌகார் ஜானகி. அவருக்கு 1968 ஆம் ஆண்டே கலைமாமணி விருது அண்ணா கையால் கிடைத்தது.
அதன் பின்னர் இருகோடுகள் படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். தொடர்ந்து கலைமாமணி விருது நந்தி விருது என பல விருதுகளை நடிப்புக்காக பெற்றுள்ளார். திரையுலகின் 100 வது ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அழைத்து கவுரவித்தார். பாரதி தாசன் கதை வசனத்தை பேசுவதை கேட்டு வியந்து கலைஞர் சொன்னது ‘ஜப்பான் பொம்மை போல இருக்கிறாரே’ என்று, ‘விட்டால் நடிப்பில் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவா’ என பாபு பட 100 வது நாள் விழாவில் மேடையில் சிவாஜி சிலாகித்து சொன்னது,
ஒளிவிளக்கு 100 வது நாளில் எமர்ஜென்சி லைட் ஒன்றை கொடுத்து எம்ஜிஆர் சொன்ன வார்த்தை ‘பண்பட்ட நடிகை நீங்கள்’. இதை சௌகார் ஜானகி பல இடங்களில் சொல்லி பெருமைப்பட்டுள்ளார். 70 ஆண்டுகள் கலைப்பயணத்தை தொடரும் சௌகார் ஜானகி சந்தானத்துடன் பிஸ்கோத்து படத்தில் நடித்துஇருந்தார். இவரது மகள் வயிற்று மகள் வைஷ்னவி, ரஜினியின் அண்ணாமலை படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தவர். மேலும், பல படங்களில் நடித்த இவருக்கு தற்போது வயது வந்த மகள் இருக்கிறார்.