நடிகர் அர்ஜுன் மகளின் திருமணம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்தில் அர்ஜுன் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் இருக்கிறது. இதை அடுத்து அர்ஜுன் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா நடித்த படங்கள்:
இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் ஐஸ்வர்யா நடித்தார். இருந்தாலும், இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார். மேலும், ஐஸ்வர்யா சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி இருந்தது.
ஐஸ்வர்யா-உமாபதி காதல்:
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கும் ராஜகிளி என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.
ஐஸ்வர்யா-உமாபதி நிச்சயதார்த்தம்:
கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் கட்டி இருந்த ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் அர்ஜுன் மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இவர்களுடைய திருமணம் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் அர்ஜுன் மற்றும் தம்பிராமையா இருவருமே பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்கள்.
திருமணம் குறித்த தகவல்:
நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததால் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்தை அர்ஜுனுக்கு சொந்தமாக பல ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பண்ணை தோட்டத்தில் நடத்த இருக்கிறார். மேலும், இவர்களுடைய திருமண பத்திரிக்கை பாக்ஸ் போன்ற டிசைன் செய்திருக்கிறார்கள். ஒரு பத்திரிகையின் விலை மட்டுமே சுமார் 5000 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிச்சயதார்த்தத்தில் தங்கத்தட்டில் விருந்து, சிறப்பு பரிசுகள், மணமகளுக்கும் மணமகனுக்கும் விசேஷ டிசைன் செய்த உடை என்று கோடி கணக்கில் செலவு செய்து இருந்தார் அர்ஜுன். திருமணத்தை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.