தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் அனுபமா சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பின் அனுபமா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் இயக்கத்தில் வெளியாகி இருந்த ட்ராகன் படத்தில் அனுபமா நடித்திருந்தார்.
அனுபமா திரைப்பயணம்:
இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருந்தது. சில மாதங்களுக்கு முன் அனுபமா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பைசன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் அனுபமா நடிப்பில் வெளியாகியிருந்த படம் கிஷ்கிந்தாபூரி. இந்த படத்தில் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீநிவாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அனுபமா பேட்டி:
திரில்லர் பாணியில் வெளியாகி இருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் போது அளித்த பேட்டியில் அனுபமா, நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் எல்லோரிடமும் அன்பாக இருங்கள். கோபத்தை மனதிற்குள்ளே வைத்திருந்தால் கடைசியில் சோகம் தான் ஏற்படும். என்னுடைய நெருங்கிய தோழி ஒருவர். நாங்கள் ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் எங்கள் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு பிரிந்து விட்டோம்.

மோசமான வலி:
நான் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். ஆனால், அவர் என்னுடன் தொடர்ந்து பேச முயற்சி செய்து கொண்டுதான் இருந்தார். அவர் எனக்கு பலமுறை மெசேஜ் பண்ணார். நான் மெசேஜ்களுக்கு எந்த ரிப்ளையுமே செய்யவில்லை. அவரை அலட்சியப்படுத்தினேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் இறந்துவிட்டதை தெரிந்து கொண்டேன். அது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத வலி. சில சமயங்களில் நாம் நேசிப்பவர்களுடனான சண்டைகள் அல்லது தவறான புரிதல்கள் நம்மை வாழ்நாள் முழுவதும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.






