இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், தனது இசை திறமையை வளர்க்க உதவிய நபர் குறித்து கூறியிருக்கும் சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை புயலாக கருதப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவரின் உண்மையான பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில், மதகுரு காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறுவயதில் இருந்த இசையில் அதிக ஆர்வம் உண்டாம்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது சிறுவயதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வொண்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் நான்கு கீ போர்ட்கள் வாசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே கனவு கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான், இசை மீது இருந்த ஈடுபாடால் தனது 15 ஆம் வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
ஏ. ஆர். ரஹ்மான் குறித்து :
பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹீட் ஆனதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ஆஸ்கார் நாயகன் :
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு இசை அமைத்ததற்காக இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ கிடைத்தது நாம் அறிந்தவையே. சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் பிசியான இசையமைப்பாளராக ஏ. ஆர். ரஹ்மான் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது இசை திறமையை வளர்க்க உதவிய நபர் குறித்து அவர் கூறியிருக்கும் சுவாரசியமான விஷயம்தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.
குடிபோதையில் இருந்த நபர்:
அதாவது, ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் தனது இசை வாழ்க்கையின் ஆரம்பத்தில், தன்னுடன் இசைக்குழுவில் பணியாற்றிய கித்தார் கலைஞர் குடிபோதையில் சொன்ன ஒரு வார்த்தை தனது இசை திறமையை வளர்க்க மிகவும் உதவியதாக கூறியிருக்கிறார். அதில், ‘நான் இரண்டு இசையமைப்பாளர்களுடன் ஒரு குழுவில் பணிபுரிந்தேன். அப்போது எனக்கு 19 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அதே குழுவில் கிட்டார் கலைஞராக இருந்த ஒருவர் குடிபோதையில் ஏன் திரைப்படங்களில் உள்ள இசையை வாசிக்கிறீர்கள்’ என்று கேட்டார்.
ஏ. ஆர். ரஹ்மான் சொன்னது:
அப்போது அவர் சொன்ன அந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது. அதற்குப் பிறகுதான் கிதார் கலைஞர் சொன்ன கருத்து உண்மையில் சரியானது என்று புரிந்து கொண்டேன். அதற்குப் பிறகுதான் எனது பாணி என்ன என்பதை அடையாளம் காணும் எனது இசைப் பயணம் தொடங்கியது என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் தான் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து தாங்கள் விவாகரத்து பெற்று விலகுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த செய்தி திரையுலகில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.