விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் நடித்த அஸ்வின், கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது.
அஸ்வின் பேச்சால் தள்ளிப்போன படம் :
இந்த திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், அஸ்வினின் ஆர்வக்கோளாறு பேச்சால் படத்தை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்காது என்று படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டார்கள். இருப்பினும் கொரோனா பிரச்சனை காரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் தைரியமாக இந்த படத்தை பொங்கல் ரிலீஸாக வெளியிட்டு இருந்தனர்.
படத்தின் கதை :
சென்னையில் உள்ள ஒரு பிரபலமான Fm ஸ்டேஷனின் Rjவாக பணியாற்றி வருகிறார் அஸ்வின் (Rj விக்ரம்). அவருக்கு தன் மனைவியாக வரப்போகும் நபரின் மீது கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அஸ்வினின் தந்தை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்ணை பார்க்கிறார். அவர் தான் அவந்திகா மிஸ்ரா (அஞ்சலி). எழுத்தாளராக இருக்கும் இவருக்கும் தனக்கு வரப்போகும் கணவர் குறித்து சில எதிர்பார்புகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமாக தனக்கு வரப் போகும் கணவருக்கு கண்டிப்பாக ஒரு முன்னாள் காதல் கதை இருக்கும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால், அஸ்வினுக்கு அப்படி எதுவும் முன்னாள் காதலியோ, காதல் கதையோ இல்லை. இருப்பினும் அவந்திகாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் அஸ்வின் தனக்கு முன்னாள் காதலி இருந்தார் என்று பொய் சொல்கிறார். மேலும், தன் முன்னாள் காதலி என்று தியேட்டர் நடிகையான தேஜு அஸ்வினியை (ப்ரீத்தி) அறிமுகம் செய்து வைத்துவிடலாம் என்று திட்டமிடுகிறார் அஸ்வின். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக தேஜு மீதே காதலில் விழுகிறார் அஸ்வின். பின் அஸ்வினுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவர் யாரை திருமணம் செய்துகொண்டார் என்பதே இந்த படத்தின் மீதி கதை.
40 மார்க் கொடுத்த பத்திரிகை :
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தோல்விப்படமாக அமைந்து இருக்கிறது. அதே போல பல விமர்சகர்களும் இந்த படத்தை கழுவி ஊற்றி வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு பிரபல பத்திரிக்கை ஒன்று 100க்கு 40 மதிப்பெண்கள் கொடுத்து இருந்தது. இதனை ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ஷேர் செய்ய அந்த பதிவிற்கு அஸ்வின் நன்றி தெரிவிக்கும் வகையில் எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.