நடிகர் சங்கத்திலிருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என நடிகர் கே.பாக்யராஜுக்கு கடிதம் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் உள்ள நடிகர்களுக்கு என்று ஒரு தனி சங்கம் இருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் தான் நடிகர் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். பின் 2015 ஆம் ஆண்டு தான் தேர்தல் பற்றி தெரிய வந்தது. அதுவரை நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் இருந்தார்கள்.
அதோடு நடிகர் சங்கத்திற்கு என பல ஆண்டு காலமாகவே கட்டிடம் கட்டும் திட்டம் இருந்து கொண்டிருக்கின்றது. இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் பாண்டவர் அணி உருவாக்கினார். 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கினார். பின் இரு அணிக்கும் இடையே வார்த்தை மோதல்கள் பயங்கரமாக உச்சகட்டத்தை எட்டி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இறுதியில் விஷால் அணி அனைத்து பதவிகளையும் பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலராக பதவி ஏற்றார்.
நடிகர் சங்கம் தேர்தல் பற்றிய விவரம்:
இந்த பதவிக்காலம் முடிவடைந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கி இருந்தார் ஐசரி கணேஷ். இவருக்கு ஆதரவாக பாக்யராஜ் இருந்தார். ஐசரி கணேஷ் ஆதரவில் பாக்யராஜ் அணி போட்டியிட்டது. பின்னர் இரு அணிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்தல் நடைபெற்று முடிந்தது. இருந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உரிமையாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததால் வாக்குகள் எண்ணப்படவில்லை.
விஷால் அணி வெற்றி:
இதனை அடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைத் தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் விசாரித்தது வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. இறுதியில் மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பாக பாக்யராஜுக்கு ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடிகர் சங்கத்துடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறார்கள்.
பாக்யராஜுக்கு அனுப்பிய ஷோகேஸ் நோட்டீஸ்:
காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உறுப்பினர்களின் தூண்டுதல் பெயரில் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செயலை செய்து இருக்கிறீர்கள். சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து செயல் குழுவில் முடிவு எடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது.
நோட்டீஸில் கூறி இருப்பது:
அதன் அடிப்படையில் சங்கத்தில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளனர். அதேபோல் நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ எல் உதயாவிற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், இவர்கள் இருவரும் கடிதம் வாயிலாகவோ அல்லது செயற்குழுவிலோ விளக்கம் அளிக்கலாம். இவர்களுடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் இருவரும் சங்கத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதை தென்னிந்திய சங்க விதி 13ன் படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.