சமீபகாலமாகவே திரைப்படங்களின் பெயர்களை நடைமுறை பேச்சு வழக்கில் வைத்து வருவது வழக்கமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் தயாரிக்கும் படத்தின் தலைப்பு குறித்து பிரபல கவிஞர் மகுடேசுவரன் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. உண்மையில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்பது தான் அதற்கு அர்த்தம். பேச்சுவழக்கில் நாம் சொன்னதை அப்படியே தற்போது தலைப்பாக்கி இருக்கிறார்கள்.
இது சரியல்ல என்று தன்னுடைய எதிர்ப்பை பிரபல கவிஞர் மகுடேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார். தூய தமிழில் பேசி, எழுதி வருபவர் தான் கவிஞர் மகுடேஸ்வரன். தமிழ் இலக்கணத்தில் ஏதாவது சந்தேகம் என்றால் முதலில் இவரைத்தான் அணுகுவார்கள். அந்த அளவிற்கு தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். தமிழ் சம்பந்தப்பட்ட சந்தேகம் எதுவாக இருந்தாலும் விளக்குவதில் இவர் வல்லமை படைத்தவர். இந்நிலையில் தற்போது இவர் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற தலைப்பு குறித்து தன்னுடைய கருத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற தலைப்பை நான் பார்த்தேன். பேச்சில் என்ன தான் மாறுபாடு இருந்தாலும் ராமன், ராவணன் முதலான சொற்களை ராமே, இராவணே என்று எழுதிக் காட்ட மாட்டார்கள். பேசும்போது மட்டும் தான் அந்த மாதிரி வரும். வட்டார வழக்கில் உள்ள சொற்களை ஒலிப்பின் வழி எழுதுவோராயினும் பெயர்களைச் சிதைத்தெழுதுவதைத் தவிர்ப்பார்கள். அப்பெயர்களை ராம், ராவண் என்று எழுதியபின் ஏகாரத் தேற்றம் சேர்த்ததுபோல் (ராம் + ஏ ஆண்டாலும்) எடுத்துக்கொண்டால் தான் சற்றே ஆறுதல்பட முடிகிறது.
முள்ளும் மலரும் படத்தில் பாடகர் பாடியதை தான் தற்போது பெயராக வைத்து இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த பாடல் எழுதிய கண்ணதாசன் ராமே, ராவனே என்று எழுதி இருக்க மாட்டார். எம்ஜிஆர் என்னும் பெயரை நம்மில் சிலபேர் எம்ஜார் என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள். ஆனால், எழுதும் போது அவ்வாறு சொல்ல முடியாதல்லவா? அதுவும் ஒரு படத்தின் தலைப்பிலேயே இப்படி செய்வது ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தை அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணிபூஜன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு க்ரிஷ் இசையமைத்துள்ளார் மற்றும் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.