சில தினங்களுக்கு முன்பு இந்தியா- சீனாவுக்கு இடையே நடந்த எல்லைப் பிரச்சனையில் பல சோக சம்பவங்கள் நிகழ்ந்தது. கடந்த மாதம் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் இருக்கும் பதற்றத்தைத் தணிக்க இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் மத்தியில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு ஓரளவு நிலைமை சரியாக தொடங்கியது. இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேரை சீன இராணுவம் கொன்ற பிறகு இரு நாட்டுக்கும் இடையே பிரச்னை பெரிய அளவுக்கு உருவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள சீனத் தூதரங்கம் முன்பும், கர்நாடகா முதலான வேறு சில இடங்களிலும் சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் கட்சியின் தலைவர்கள் பலர் சீனாவின் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு பலரும் சீன பொருட்கள் மற்றும் செயலிகளை புறக்கணிப்போம் என்றும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் சீனாவின் தயாரிப்புகளை பயன்படுத்தப்போவதில்லை என்று சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால், அதை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.
இதன் தொடக்கமாக நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும். என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.