தேசிய விருது வென்ற தெலுங்கு பட ரீமேக்கில் பிக் பாஸ் பிரபலம் விஷ்ணு நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தொலைக்காட்சி தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஷ்ணு குமார். இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் ஆபீஸ் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தார்.
இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சத்யா சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் எல்லோருமே இவரை அமுல் பேபி என்று தான் அழைத்தார்கள். இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்தார்கள். அதுவும் நன்றாக சென்றது. பின் திடீரென்று விஷ்ணு சீரியலில் இருந்து விலக இருந்ததால் சீரியலை முடித்துவிட்டார்கள்.
விஷ்ணு திரைப்பயணம்:
அதற்கு பின் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த இது சொல்ல மறந்த என்ற தொடரில் நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்தார். இதுவும் ரீமிக்ஸ் தொடர் தான். இருந்தாலும், இந்த தொடர் ஆரம்பத்தில் நன்றாக தான் சென்றது. திடீரென்று இந்த தொடரை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இவன் யார் என்று தெரிகிறதா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார்.
பிக் பாஸ் 7:
அதனை தொடர்ந்து இவர் மாப்பிள்ளை சிங்கம், 6 அத்தியாயம், களரி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும், விஷ்ணு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்தது. அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு:
நிகழ்ச்சி ஆரம்பத்தில் விஷ்ணு நன்றாக தன் விளையாடி வந்தார். ஆனால், இடையில் இவர் செய்த தேவையில்லாத வேலையால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள்.
விஷ்ணு நடிக்கும் படம்:
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோவாக விஷ்ணு களமிறங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படம் தான் சி லா சோவ். இந்த படத்தினுடைய தமிழ் ரீமேக்கில் தான் விஷ்ணு நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் இந்த படம் பெற்றிருக்கிறது. தற்போது இந்த படத்தில் விஷ்ணு நடிக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.