வங்கி வேலையை விட்டுவிட்டு டீக்கடையில் நின்று பல கோடி ரூபாய் வருமானத்தில் சாதனை செய்துள்ளார் கரூர் இளைஞர் ஜோசப் ராஜேஷ். இவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஜோசப் ராஜேஷ் அவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் மொச்சக்கோட்டம் பாளையத்தில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அம்மா இல்லத்தரசி, அப்பா வெறும் 8000 ரூபாய் சம்பளத்தில் பஸ் பாடி பில்டிங் பட்டறையில் பணியாற்றி வருபவர். இவருடைய தம்பி தமிழ்நாடு காவல் துறையில் தலைமை காவலராக உள்ளார். ஜோசப் ராஜேஷ் அவர்கள் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு நிறுவனத்தில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு செய்தார்.
குடும்ப சூழ்நிலைக்காக வேலை செய்து கொண்டே ஜோசப் ராஜேஷ் படித்தார். பின் பள்ளி படிப்பு முடித்தவுடன் இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் காமர்ஸ் பிரிவில் 2006ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பிறகு கல்லூரி படிப்பை முடித்தவுடன் இவர் எஸ் ஐ பதவிக்கு படித்தார். பின் இவர் எஸ் ஐ தேர்வு எழுதி வெற்றியும் பெற்றார். ஆனால், இவருக்கான பணி நியமன ஆர்டர் வரவில்லை. இதேபோல் அந்த தேர்வு எழுதிய பலருக்கும் வேலை போடவில்லை. இதனால் மனமுடைந்த ஜோசப் வேலை தேடி அலைந்தார். பின் மூன்று வருடமாக எம்எல்எம் திட்டத்தின் கீழ் விற்கப்படும் அழகு சாதன பொருட்கள் மற்றும் சுற்றுலா பொருள்களை விற்பனை செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார்.
இதையும் பாருங்க : தங்கத்தை பத்திரம் மூலம் முதலீடு செய்வதன் பலன் – SBI சொல்லும் 6 முக்கிய காரணங்கள்.
இதில் மாதம் 42,000 ரூபாய் சம்பளம் வாங்கினார். இருந்தாலும் இவர் ஏதோ ஒன்றை தொலைத்தது போல் மனநிம்மதி இல்லாமல் இருந்தார். பின் இந்த வேலையை விட்டு 2016 ஆம் ஆண்டு புதிதாக தொழில் துவங்கலாம் என்று முடிவு செய்தார். அதற்குப் பிறகு தான் ஜோசப் ராஜேஷ் சென்னையில் 100 சதுர அடியில் Black Pekoe என்ற டீக்கடையை திறந்தார். ஆரம்பத்தில் இவர் ஒரு ஊழியரை வைத்து தான் இந்த தொழிலைத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் வரை இவருடைய தொழில் முன்னேறியது. பின் இந்த தொழிலில் எப்படியாவது பல மாற்றங்களை கொண்டு முன்னேற்ற வேண்டும் என்று ஜோசப் ராஜேஷ் வங்கியின் மூலம் கடன் வாங்கினார்.
அதை வைத்து 100 சதுர அடியாக இருந்த இடத்தில் 900 சதுர அடியில் பெரிய கடையை திறந்தார். ஆனால், இந்த இடத்தில் பார்க்கிங் செய்வதற்கு கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. இதனால் பல பிரச்சனைகள் வந்து கடையை மூட வேண்டிய சூழ்நிலைக்கு ஜோசப் ராஜேஷ் தள்ளப்பட்டார். இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் விடாமல் ஜோசப் முயற்சி செய்து கொண்டிருந்தார். தன்னுடைய கடையை கைவிடாமல் ராமானுஜம் ஐடி சிட்டி என்ற பகுதியில் 3 லட்சம் ரூபாய் முதலீட்டில் மீண்டும் கடையைத் தொடங்கினார். தன்னுடைய Black Pekoe டீக்கடையை பிராண்ட் மற்றும் வர்த்தக ரீதியாக பிரபலமாகினார்.
மேலும், 2017ஆம் ஆண்டு வெறும் 50 ஆயிரம் முதலீட்டில் துவங்கி இவருடைய டீக்கடை தற்போது கோடி கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறது. இப்போது இவர் பிக்பில்லியன் புட் நிறுவனத்தின் கீழ் Black Pekoe மற்றும் Tea Boy chai ஆகிய இரு பிராண்டு கீழ் சுமார் 798 கிளைகளை உருவாக்கி சாதனை செய்துள்ளார். சென்னையில் பல முக்கியமான பகுதிகளில் இவருடைய டீ கடை தான் இயங்கி வருகிறது. மேலும், இவருடைய டீ கடைக்கு என்றே மக்கள் மத்தியில் பிரபலம் உள்ளது. அந்த அளவிற்கு தரமான டீயை கொடுத்து வருகிறார். சாதாரண டீ கடையில் ஆரம்பித்து இன்று பிராண்ட் டீக்கடையாக உழைத்து முன்னேறி ஜோசப் உள்ளார். இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு மிகச் சிறந்த ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.