90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத சித்தி சீரியல் Title பாடலுக்கும் இந்த அர்ஜுன் பாடலுக்கும் எவ்ளோ ஒற்றுமை பாருங்க.

0
1344
- Advertisement -

1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ஒரு மெகாத்தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. அடுத்த ஆண்டு அதாவது 2000ஆம் செப்டம்பர் மாதம் ஒரு திரைப்படம் வெளியானது. சீரியலுக்கும் திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், இரண்டிலுமே துவக்கப்பாடலில் நதியையும் பெண்ணையும் ஒன்றாக இணைத்துப் போற்றுவதுபோல வரிகள் இடம்பெற்றிருந்தன.
எந்த எந்த வகையில் அந்த ஒப்பீடு இருந்தது என்பதில் இரண்டு பாடல்களுமே வேறுபட்டு இருந்தன.

-விளம்பரம்-

முதலில்,
சீரியல் பாடலில் நதியின் பயணமும் பெண்ணின் பயணமும் இவ்வாறாக இருக்கும்.

- Advertisement -

“மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்
பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்”

இந்தப் பயணமானது திரைப்பாடலில் வளர்ச்சியின் வடிவாக உருவங்களில் எழுதப்பட்டிருக்கும்

-விளம்பரம்-

“நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ”

அடுத்து,
பயன்களைப்பற்றி எழுதும்போது
(பயன்கள் என்று சொல்வதில் மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன)

சீரியலில்

“நதியின் கொடைதான் வயல்களில் பசுமை
பெண்ணின் கொடைதான் வாழ்வினில் இனிமை”

திரைப்படத்தில்

“தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே”

பயணத்திலும், பயன்களிலும் மாறுபடும் வரிகளில் குணங்களைப் பற்றி வரையறுக்கும்போது இரண்டு பாடல்களிலுமே ஒரே அலைவிரிசையில் வரிகள் வகுக்கப்பட்டிருக்கும்.

சீரியலில்

“நதி கரை தாண்டிவிட்டால்
காடு கரை கொள்ளாது
பெண்ணும் படி தாண்டிவிட்டால்
நாடும் வீடும் தாங்காது”

திரைப்படத்தில்

“நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்”

சீரியல் பாடல் – கண்ணின்மணி் (சித்தி)
திரைப்பாடல் – நதியே நதியே (ரிதம்)

‘ ரிதம்’ படத்தில் கார்த்திகேயன் என்கிற புகைப்படக்கலைஞன் இயற்கையில் திளைத்தி்ருந்து நதியைப் பெண்ணாக உருவகம் செய்து ரசித்து மகிழ்கிறான். அப்பொழுது அவன் “மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே” என்று ரசித்துப் பாடலாம்.

ஆனால், ‘சித்தி’ சீரியலில் சாரதாவுக்காக அதே ஒப்பீட்டுத் தளத்தில் வரிகள் எழுதப்படும்போது அங்கு ரசனை இரண்டாம்படிக்குப் போய் முதல் படிக்கு சாரதாவின் வாழ்க்கையைச் சொல்லவேண்டியது அவசியமாகிவிடுகிறது.
அதனால்தான் இப்படி வரிகளில் வாழ்க்கையையும் கதையையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

“வலப்பக்கம் ஒரு கரை இடப்பக்கம் ஒரு கரை
நதிகள் நடுவில் ஓடி வரும்
தியாகத்தில் ஒரு கரை சேவையில் மறு கரை
பெண் நதி நடுவில் பாடி வரும்

இரண்டுக்கும் ஒரே பாடலாசிரியர் – “வைரமுத்து”

பாடல் வரிகள் வாழ்வாங்கு வாழ்ந்த காலம் அது.

Advertisement