காபி டே நிறுவனத்தை மீட்டு எடுத்து சிங்கப்பெண்ணாக திகழ்கிறார் மாளவிகா ஹெக்டே. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் மிகப் பிரபலமான நிறுவனமாக திகழ்வது காபி டே நிறுவனம். இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் சித்தார்த்தா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் மிகப் பிரபலமான தொழிலதிபர் ஆவார். சித்தார்த்தா 1993ம் ஆண்டு தான் இந்த காபி டே நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சர்வதேச சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்தது. மேலும், இந்த நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது.
அதோடு பல நாடுகளிலும் இதன் கிளை பரப்பி பிரபலமாக விளங்கியது. அதோடு ஆசியாவிலேயே அரபிக்கா பீன்ஸ் வகை காபி உற்பத்தியில் சித்தார்த்தா நிறுவனம் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. இருந்தாலும் தொழில் போட்டியில் காபி டே நிறுவனம் தொடர் சரிவை சந்தித்து வந்தது. அதிலும் பங்குச் சந்தையில் கண்ட சரிவினால் காபி டே நிறுவனத்திற்கு அதிக கடன் சுமை ஆனது. இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார்.
சித்தார்த்தா தற்கொலை:
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை இருபத்தி ஒன்பதாம் தேதி மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே திடீரென மாயமானார். இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு பின்னர் ஹோய்கே பஜார் பீச் பகுதியில் இவரின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. இந்த தகவல் அவருடைய குடும்பத்திற்கு பேரிடியாக இருந்தது. மேலும், சித்தார்த்தா பெரும் கடன் சுமையால் தத்தளித்து வந்ததாகவும், கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியானது.
காபி டே நிறுவனத்தின் கடன்:
அதோடு அவர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் தான் கடன் சுமை தாங்க முடியாமல் இருக்கிறேன் என்று எழுதி இருந்தார். இவர் இறந்த போது இந்த நிறுவனம் மீது சுமார் 7,000 கோடி ரூபாய் கடன் சுமை இருந்தது. இதனால் இந்த நிறுவனம் ஒருபோதும் மீள முடியாது என்று அந்த நிறுவன ஊழியர்கள் எல்லாம் கூறினார்கள். மேலும், இந்த கடையை இழுத்து மூட வேண்டியது தான் என்று பல பேர் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகாவுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் காபி டே கடை இருக்க வேண்டும் என்பது தான் சித்தார்த்தாவின் ஆசை.
சிங்க பெண்ணாக மாறிய மாளவிகா:
தன்னுடைய கணவரின் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மாளவிகாவால் மீளா முடியவில்லை. இருந்தாலும் தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் காபி டே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். மேலும், மாளவிகா பொறுப்பேற்று வெறும் 2 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் மீது இருந்த கடன் சுமையை பாதியாக குறைத்து வெற்றிப் பாதைக்கு வழி வகுத்தார். இவரின் செயல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் பல பேருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது காபி டே நிறுவனத்தின் கடன் சுமை வெறும் 3100 கோடியாக இருக்கிறது.
முன்னாள் கர்நாடக முதல்வர் மகள்:
மேலும், இந்த நிறுவனத்தை கடன் இல்லாமல் லாப பாதைக்கு திரும்புவதே தன்னுடைய லட்சியம் என்றும் சமீபத்தில் மாளவிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படி கடன் சுமையால் தன் கணவர் தற்கொலை செய்தும் மனம் தளராமல் கடினமாக போராடி குறுகிய காலத்தில் நிறுவனத்தின் மேலிருந்த கடன் சுமையை பாதியாக குறித்த மாளவிகா பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், இந்தியாவின் சிங்கப்பெண் ஆகவே திகழ்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதோடு மாளவிகா வேற யாரும் இல்லைங்க முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்தும் மாளவிகா தன்னுடைய கடும் முயற்சியால் உழைத்துப் போராடி இருக்கிறார்.