மறைந்த பிரபல நடிகர் டெல்லி கணேஷின் செல்லப்பிராணி குறித்து அவரது மகன் அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த புகழ் பெற்ற மிகச்சிறந்த குணசித்திர நடிகர் தான் டெல்லி கணேஷ். விமானப்படையில் பணியாற்றி வந்த டெல்லி கணேஷ், மேடை நாடகங்கள் மீது உள்ள காதலின் காரணமாக தன்னுடைய பணியில் இருந்து விடுபட்டு டெல்லியை சேர்ந்த ஒரு நாடக சபாவின் சார்பாக பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அதற்குப் பிறகு, கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான, ‘பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய டெல்லி கணேஷ் வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று தன்னிடம் கொடுக்கப்படும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்தியவர். டெல்லி கணேஷுக்கு மகாதேவன் என்கிற மகன் உள்ளார். தன் மகனை வைத்து கூட டெல்லி கணேஷ் ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த நவம்பர் 9ஆம் தேதி இரவு உறங்கச் சென்ற டெல்லி கணேசஷின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவர் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
மகாதேவன் கணேஷ் பேட்டி:
தற்போது தனது அப்பா குறித்து மகாதேவன் கணேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில், என்னுடைய அப்பா என்னை வைத்து படம் பண்ணது உண்மைதான். எல்லாரும் என்னால மூன்று கோடி லாஸ் ஆயிடுச்சி, அதனால தான் அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு சொல்றாங்க. அவருக்கு உண்மையாக இருந்த கஷ்டம் அந்த படம் மக்களை சேராதது தான். பண நஷ்டத்தை பற்றி அவர் ஒரு இடத்தில் கூட பேசி இருக்க மாட்டாரு. எல்லா அப்பாக்கள் மாதிரி தான் என்னுடைய அப்பாவுக்கும் நான் நல்லா வரணும்னு ஆசை. என்னைப் பற்றி நினைத்து, ராத்திரியில் தூங்கும் போது இறந்து போற அளவுக்கு அவர் கிடையாது.
செல்லப்பிராணி குறித்து:
அவர் ஒரு ஆர்மி மேன். எல்லா அப்பாக்களுக்கு இருக்கிற மாதிரி வருத்தம் தான் என்னுடைய அப்பாவுக்கும் இருந்தது. எங்களை மாதிரி எங்க அப்பாவை அவருடைய செல்லப்பிராணியும் மிஸ் செய்கின்றது. எங்க அப்பா கூட எப்பவுமே அவருடைய வளர்ப்பு பிராணி இருக்கும். அது பேரு பஞ்சு. பஞ்சு என்றால் காட்டன். அப்பாவுக்கு அது பயங்கர செல்லம். என்னையும் எங்க அப்பாவையும் தாண்டி அவர் எங்கேயும் போக மாட்டார். எங்க ரெண்டு பேரையுமே சுத்தி சுத்தி வந்துட்டு இருப்பாரு. அப்பா தவறியது அவனுக்கு எப்படி இருந்ததுன்னு தெரியல. அப்பாவை ஐஸ் பாக்ஸ்ல வச்சிட்டு இருக்கும்போது சுத்தி சுத்தி ஓடிட்டு இருந்தான்.
அப்பாவை தேடுறான்:
அதுக்கு அப்புறம் ஒரு கட்டத்துல, அப்பா பக்கத்துல உக்காந்துட்டான். அப்போ வந்தவங்களுக்கு எல்லாம் பஞ்சுவ பார்த்துட்டு ஒரு பயம் இருந்தது. அதனால, அவனை உள்ள உட்கார வைக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு. அப்பாவுக்கு அவன் பயங்கர செல்லம். தீபாவளி அப்ப கூட பட்டாசுக்கு ரொம்ப பயப்படுவான். அந்த மாதிரி எல்லா நாய்களும் பயப்படும். அப்ப கூட என்னுடைய அப்பாக்கு பின்னாடி தான் போய் மறைந்து கொள்வான். அப்பாவுக்கு அந்த அளவுக்கு செல்லம். இப்ப கூட அப்பா ரூமுக்கு போகிறான். அப்படி இப்படின்னு அப்பாவ தேடிட்டு பெட் சீட்டை முகர்ந்து பார்க்கிறான். நம்மள மாதிரி அப்பாவை அவனும் தேடுறான்னு நான் நினைக்கிறேன்.
ரொம்ப ஆச்சரியமாக இருந்தது:
அதே மாதிரி, வீட்டுக்குள்ள அப்பாவ வச்சுட்டு இருக்க வரைக்கும் அவன் எதுவும் பண்ணவில்லை. அமைதியாக ரூமுக்குள்ள உக்காந்துட்டு இருந்தான். அப்பாவை வெளியே கொண்டு வரும்போது அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, கதவைப் போட்டுப் பிராண்டி வெளியே ஓடி வந்துட்டான். அவன் எப்படி அதை உள்ள இருந்து கண்டுபிடிச்சானு தெரியல. அதெல்லாம் நினைக்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. மேலும், எனக்கு திருமணம் ஆகவில்லை என்கிற வருத்தம் எங்க அப்பாவுக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் எனக்கு திருமணம் ஆகும்போது அவருடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போதுமே இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று எமோஷனலாக பேசியுள்ளார்.