தேசிய தலைவர் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் எஸ் எஸ் ராஜேந்திரன் மகன் நவமணியை மேடையிலேயே அடிக்க சென்ற சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் மிகப்பெரிய வசதி படைத்த ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர்.
இருந்தாலும், இவர் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் உழைத்தவர். இவர் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். மேலும், இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர் தேவர். இவர் சிறந்த பேச்சாளர், ஆன்மீகவாதியம் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தேவர் ஐயாவின் மீது மிகுந்த பாசத்தினாலும், மரியாதையினாலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தேசிய தலைவர் படம்:
இந்த நிலையில் தேவர் ஐயாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர் தேசிய தலைவர். ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இஸ்லாமியரான இவர் இந்த படத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார்.
டீசர் வெளியீட்டு விழா:
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை எடுப்பதில் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் எஸ் எஸ் ஆர் கண்ணன் உறுதுணையாக இருந்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது எஸ் எஸ் ராஜேந்திரன் மகன் எஸ் எஸ் கண்ணன் அவர்கள், முத்துராமலிங்க அய்யா உடல்நிலை சரியில்லாத போது எனக்கு பெண் மருத்துவர், பெண் நர்ஸ் தேவையில்லை என்று கூறியிருந்தார்.
எஸ் எஸ் ஆர் கண்ணன்-நவமணி விவாதம்:
உடனே என்னுடைய அப்பா தான் அவருக்கு தேவையானதெல்லாம் தயார் செய்து தந்தார் என்று கூறியிருந்தார். இதை கேட்ட நவமணி, அப்படியெல்லாம் ஒன்று நடக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும். முத்துராமலிங்க ஐயாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற விருப்பமே இல்லை. எம்பி பதவி அவர் ஏற்கவில்லை என்றவுடன் அதை பரிசீலனை செய்ய ஆட்கள் வந்தபோது நீங்கள் நாட்டு வைத்தியம் எடுத்துக் கொண்டால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மருத்துவமனையில் இருந்தால் மட்டும்தான் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொன்னவுடன் அவர் அதற்காக தான் மருத்துவமனைக்கு வந்தார்.
அடிக்க சென்ற எஸ் எஸ் ஆர் கண்ணன்:
அவர் அந்த மாதிரி சொன்னது உண்மை. ஆனால், இவர்கள் தான் ஏற்பாடு செய்து அதை பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்வதெல்லாம் பொய் . அந்த பக்கம் இவர்கள் சும்மாதான் அவரை பார்க்க வந்தார்கள் என்று சொன்னவுடன் ஆத்திரமடைந்த எஸ் எஸ் ஆர் கண்ணன் மேடையிலேயே நவமணியை அடிக்க சென்றார். பின் உடன் இருந்தவர்கள் இவர்களுடைய சண்டையை விலக்கி வைத்தனர். சில நிமிடங்கள் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்று சொல்லலாம். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.