இளையராஜா குறித்து கேள்வி எழுப்பியதற்கு வைரமுத்து அளித்த பதில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக யாஷிகா ஆனந்த் திகழ்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் படிக்காத பக்கங்கள். இந்த படத்தை செல்வம் மாதப்பன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படத்தை பற்றி பேசி இருந்தார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து இந்த விழாவில் கூறியிருப்பது, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. இசையும், பாடல் வரி களும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது.
இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.இதை பார்த்த பலருமே இவர் இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இசையமைப்பாளர் கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும். அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார். வைரமுத்துவை வாழ வைத்தது இளையராஜா தான். இதனால் இளையராஜாவின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து வணங்க வேண்டும்.
இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரை இருந்திருக்காது. நான் அவருக்கு சவால் விடுகிறேன். இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் கிடையாது. தன்னைத்தானே புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிற கவிஞர்கள் இங்கே யார் இருக்கிறார்? அதை இவர் தான் செய்கிறார். நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார் வைரமுத்து. இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஆவேசமாக பேசி இருந்தார்.
இப்படி ஒரு நிலையி மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாட்டில் வைரமுத்து பங்கேற்று இருந்தார். இந்த மாநாட்டிற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வைரமுத்துவிடம் இளையராஜா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே ‘இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லிவிட்டேன்’ என்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து எம்எஸ்வியா? கண்ணதாசனா? என்ற கேள்வி நிருபர் எழுப்பிய கேள்விக்கு உடலா உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்எஸ்வியா கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில்’ என்று கூறியுள்ளார்.