சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் அர்வி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2022ஆம் ஆண்டு சந்தானம் அவர்கள் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். இவர் ஹாக்கி வீரர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், இவரால் தன் கனவை நிறைவேற்ற முடியவில்லை. பின் சந்தானம் ஈபி மேனாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் திருமண வாழ்க்கையிலும் சந்தானத்துக்கு நிம்மதி இல்லை. ஏதோ வேண்டா வெறுப்பா தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் அதாவது 2027 ஆம் ஆண்டு சந்தானம் மின்சாரம் சரி செய்யப்போன இடத்தில் டைம் மெஷின் ஒன்று கிடைக்கிறது. இதை வைத்து இவர் மீண்டும் 2020 ஆண்டுக்கு சென்று தன்னுடைய வாழ்க்கையை மாற்றலாம் என்று நினைத்து செல்கிறார். தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்த முற்படுகிறார். கடைசியில் சந்தானம் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? ஹாக்கி போட்டியில் ஜெயித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
சந்தானம் என்றாலே படங்களில் மற்றவர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது, கலாய்ப்பது தான் ட்ரேட் மார்க். ஆனால், இந்த படத்தில் சந்தானத்தின் சில வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் நடிகர் சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதமாக வசனத்தை பேசி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பெண்கள் ஆடை சுதந்திரம் பற்றி சந்தானம் பேசிய வசனமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் நாயகியிடம் சந்தானம் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறுவார். அப்போது நாயகி அரை குறை ஆடை அணிந்து சந்தானம் முன் வந்து நிற்பார்.
அப்போது சந்தானம் என்ன ட்ரெஸ் இது என்று கேட்க, அதற்கு நாயகி ‘இது ஆடை சுதந்திரம் இதில் நீ தலையிடாதே ‘ என்று சொல்வார். அதற்கு சந்தானம் ‘உனக்கு ஏத்தா மாதிரி வாழ்றது சுதந்திரம் இல்ல, நீ வாழ்றத மற்றவங்க ஏத்துக்கறது தான் சுதந்திரம், கொஞ்சம் இழுத்தா அவுந்துரும் இதுக்கு பேர் சுதந்திரமா’ என்று கூறுவார்.
தற்போது இந்த வசனம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பெண்கள் ஆடை குறித்து வெற்றிமாறனிடம் கேட்கப்பட்ட போது அவர் அதற்க்கு சொன்ன பதிலின் வீடியோ ஒன்றையும் நெட்டிசன்கள் பகிர்ந்து ‘டிக்கிலோனா’ படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்த இயக்குனரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.