தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் “டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் உருவாகியுள்ளது. இந்த இரண்டு படத்தையும் ஒரே நாளில் அதாவது ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடுவதாக தகவல் வந்தது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தின் விளம்பரங்களை செய்து கொண்டு வந்தனர். ஒரே நடிகரின் இரண்டு படங்கள் அதுவும் ஒரே நாளில் வெளியானால் சினிமாவில் வசூல் பாதிக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதனையடுத்து டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம் படத்தின் தயாரிப்பாளர்கள் இடையே மோதல்கள் நடந்தது. பின் இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்கள். இந்நிலையில் இவ்விரு படக் குழுவினரை அழைத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன், சர்வர் சுந்தரம் பட தயாரிப்பாளர் செல்வக்குமார் மற்றும் டகால்டி பட தயாரிப்பாளர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒருவழியாக இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் சமாதானத்துக்கு வந்தார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அவர்களின் அறிவுரைப்படி ‘டகால்டி’ படம் 31ஆம் தேதி வெளிவருகிறது. சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளிவரும் என்று கூறினார்கள். இந்த முடிவுக்கு இரு தயாரிப்பாளர்களும் ஒத்துக் கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் யாருடைய படத்தையும் இந்த தேதியில் வெளியிடுங்கள் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால், சினிமாவில் பிரச்சனை நிகழ கூடாது என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது பாரதிராஜா அவர்கள் கூறியது, பாரதிராஜா என்பவன் இத்தனை வருடங்கள் சினிமா துறையில் நான் சம்பாதித்த பெயர். இந்த பெயருக்கு மதிப்புக் கொடுத்து இவ்விரு படத்தின் தயாரிப்பாளர்களும் சமரசம் ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சர்வர் சுந்தரம் படத்திற்கும் எனக்கும் ஒரு ஏமோஷனல் கனெக்சன் இருக்கிறது என்று சொல்லலாம். தற்போது நீங்கள் பார்க்கும் பாரதிராஜா வேறு, அப்போ,
நாகேஷின் சர்வர் சுந்தரம் படம் வெளியாவதற்கு முன்பே விநியோகஸ்தர்களுக்கு படம் போட்டு காட்டுவதற்கு ஏவிஎம்க்கு அழைத்துச் சென்றார்கள். சாதாரணமாக ஏவிஎம் உள்ளே செல்ல முடியாது. ஆனால், நான் அந்த படத்தை பார்க்க மீடியேட்டர் உடன் சென்றதால் உள்ளே செல்ல முடிந்தது.
நான் வெளியிடாத நாகேஷ் சார் படத்தை பார்க்க போகிறேன் என்று குஷியில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது ஒருவர் யார் நீங்கள் என்று கேட்டார்கள். நான் இவருடன் வந்திருக்கிறேன் என்று நான் சொன்னேன். என்னை அழைத்து வந்தவன் அவர்களை பார்த்து பயந்து கொண்டு என்னை யாரென்று தெரியாது என்று சொல்லிவிட்டார். உடனடியாக அந்த மேனேஜர் என் சட்டையை பிடித்து இழுத்து ஏவிஎம் வாசலில் வெளியே விரட்டினார். அப்போது சேலஞ்சை செய்தேன். ஒருநாள் மிகப்பெரிய நடிகராகவோ, இயக்குனராகவோ இந்த ஏ வி எம்க்கு வருவேன். பின் அதே நிறுவனம் புதுமைப் பெண் என்ற படத்தை இயக்க என்னை அழைத்தது. இதை நான் சரவணன் இடமே சொல்லி இருக்கிறேன் என்று கூறினார்.