‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, தனது திருமணத்திற்கு யாரையும் அழைக்காதது ஏன் என்று கூறியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகவும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய படம் ‘டான்’.
இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தின் பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ராதா ரவி உட்பட பலர் நடித்திருந்தார்கள். பாஸ்கரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். குறிப்பாக படத்தில் கண்டிப்பான தந்தையாக சமுத்திரக்கனி நடித்திருந்தார்.
டான் படம்:
இதனால் சிவகார்த்திகேயனை அதிகமாக திட்டும் தந்தையாக சமுத்திரக்கனி இருப்பார். ஆனால், எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முயற்சிப்பார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? தன் தந்தையின் எண்ணத்தை முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
சிபி சக்கரவர்த்தி:
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான் இயக்கிய முதல் படத்திலேயே வெற்றியை கண்டவர். இவர் இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது வரை சிவகார்த்திகேயன் கேரியரில் அதிக வசூல் இயற்றிய திரைப்படம் என்றால் அது டான் படம் தான். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான EDISON விருதும் சிபி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்குப் பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு பெரியதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிபி சக்கரவர்த்தி திருமணம்:
இந்நிலையில் சமீபத்தில் தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்கு முன்பே சிபி சக்கரவர்த்தி, நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட தன்னுடைய நண்பர்கள் சில பேருக்கு பார்ட்டி கொடுத்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் உடன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சிபி சக்கரவர்த்திக்கு ஸ்ரீ வர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்று இருந்தது. இவர்களது திருமணம் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு:
இந்நிலையில், திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, டான் படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சிபி சக்கரவர்த்தி, அடுத்த படத்திற்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். மேலும், வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்றும் அதற்காக தான் இந்த சந்திப்பு என்றும் கூறியுள்ளார். அதோடு, பத்திரிகையாளர்களுக்கு தங்கள் கையாலேயே சிபி மற்றும் அவரது மனைவி உணவு பரிமாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.