தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து சிறிது நேரத்தில் அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்துக்கும் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து நாளை காலை 11.00 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாளை சென்னை வருகிறார்கள்.
80 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் எனப் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து 95வது வயதில் இன்று மறைந்திருக்கிறார். இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல்துறை வல்லமை கொண்ட தலைவர் எனக் கடந்த நூற்றாண்டில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக, மக்கள் மத்தியில் மாபெரும் சக்தி பெற்றத் தலைவராக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய தி.மு.க. அனுமதி கோரியிருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் நேரில் சந்தித்த்து கோரினர். மேலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், “கலைஞர் உடலை அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான் தலைவரின் விருப்பமும், தி.மு.க.வினர் அனைவரின் விருப்பமும். இதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற நாங்கள் மற்றும் தலைவர் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தோம். அவர்கள் ‘பார்ப்போம்’ என அவரிடம் பேசி அனுப்பி விட்டார்கள். மீண்டும் முறைப்படி கேட்கவேண்டும் என்றும் செயல் தலைவர் கையொப்பமிட்டு முதல்வருக்கு வேண்டுகோள் மனுவை நானும், பொன்முடி, நேரு ஆகியோர் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமையைச் சந்தித்து தளபதி சார்பில் மனுவை அளித்தோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். முழுமையான பதிலை தரவில்லை. எதிர்பார்த்திருக்கிறோம்,” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்,” எனத் தெரிவித்துள்ளார். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது தற்போதைய சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.