டிராகன் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து தற்போது இவர் ட்ராகன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ட்ராகன் படம்:
இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூல் சாதனையும் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் டிராகன் படக்குழுவினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்து பதிவு:
விஜயுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஸ்வின் மாரிமுத்து பகிர்ந்து,
ஒரு நாள் முழு தகுதியுடன் இவரை சந்திக்க வேண்டும், இவருடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசையில் ரொம்ப கடுமையாக உழைத்து வருகிறேன். இது என்னுடன் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அவருடன் சேர்ந்து பணியாற்றுவேனா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், நான் அவரை சந்தித்து விட்டேன். அவருக்கு எதிரில் நான் அமர்ந்திருந்தேன்.
View this post on Instagram
விஜய் பற்றி சொன்னது:
பொதுவாகவே நான் ரொம்ப அதிகமாக பேசும் பழக்கமுடையவன். நான் எப்போது பேசுவேன் என்று என்னுடன் வந்தவர்கள் எல்லாம் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவிற்கு நான் அவரோட தீவிர ரசிகன். அவர் என்னை பார்த்ததுமே என்னுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்து விட்டது. அதை பார்த்து எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அதெல்லாம் சொன்னா புரியாது. சிறப்பான ரைட்டிங் என்று விஜய் சார் பாராட்டி இருந்தார். இது போதும் என்று நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

படத்தின் கதை:
படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், 12ஆம் வகுப்பில் நன்றாக படித்து 96 சதவீதம் மதிப்பெண் எடுத்து மெரீட்டில் கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், பள்ளியில் ஒரு பெண் இவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கல்லூரியில் இவர் அடாவடி செய்யும் ரகளை பையனாக வலம் வருகிறார். இதனால் இவர் 48 அரியர் வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கதாநாயகி அனுபமாவை இவர் காதலிக்கிறார். இவருடன் படித்தவர்கள் எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். ஆனால், இவர் மட்டும்தான் பிக் பாஸ் பார்த்து வாழ்க்கை கழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அனுபமா இவருடைய காதலை பிரேக் அப் செய்து விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த பிரதீப், அனுபமா முன்னாடி நன்றாக வாழ வேண்டும் என்று போலி சர்டிபிகேட் தயார் செய்து லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். அப்போது ஒரு நாள் மிஸ்கின், பிரதீப் போலி சான்றிதழ் மூலம் தான் வேலைக்கு போனார் என்ற விஷயம் தெரியவந்து 48 அரியரையும் கிளியர் செய்ய சொல்கிறார். அதற்குப்பின் பிரதீப் என்ன செய்தார்? தன்னுடைய அரியரை எல்லாம் கிளியர் செய்தாரா? தன்னுடைய காதலில் ஜெயித்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.






