பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கே.ஆர்.ரங்கம்மாள் பாட்டி. இவருக்கு தற்போது 83 வயது ஆகிறது. இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், இந்தி என பிற மொழி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து தற்போது இருக்கும் நடிகர்களின் படங்களிலும் ரங்கம்மா பாட்டி நடித்திருக்கிறார். அதிலும் இவர் வடிவேல், கஞ்சா கருப்பு போன்ற காமெடி நடிகர்களின் படங்களில் இணைந்து நிறைய காமெடி காட்சியில் நடித்து இருக்கிறார். இதுவரை இவர் 500க்கும் மேல் படங்களில் நடித்திருக்கிறார். பின் பட வாய்ப்பு இல்லாததால் சில காலம் ரங்கம்மா பாட்டி வறுமையில் வாடி இருந்தார். இருந்தும் இவர் பிறர் கை ஏந்தாமல் மெரினா கடற்கரையில் கைக்குட்டைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்று தன் பிழைப்பு நடத்தி இருந்தார்.
ரங்கம்மா பாட்டியின் நிலைமை:
ரங்கம்மாள் பாட்டி தன்னுடைய கடைசி காலகட்டத்தில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தனியாக தவித்துக் கொண்டு இருந்தார். இறுதியாக ரங்கமா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் தன்னுடைய உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்திருந்தார். அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பஸ் ஸ்டான்ட்டில் மயங்கி விழுந்துகிடந்த ரங்கம்மா பாட்டியை அங்கு இருந்தவர்கள் சிலர் உதவி செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதரவு இல்லாமல் இறந்த சோகம் :
சாகும் வரை உழைத்து தான் சாப்பிட்டுவிட்டு செல்லுவேன் தவிர பிறர் உழைப்பில் வாழ மாட்டேன் என்று பேசி இருந்தார். இப்படி வாழ்வின் இறுதி வரை நேர்மையாக இருந்த ரங்கம்மா பாட்டி தற்போது காலமாகி உள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் மரணமடைந்ததை தொடர்ந்து அன்னூர் தெலுங்குபாளையத்தில் இறுதி சடங்கு இன்றே நடைபெறுகிறது. ரங்கம்மா பாட்டியின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் கவுதமன் இரங்கல் :
இந்நிலையில், அவரை தனது படத்தில் நடிக்க வைத்திருக்க இயக்குனர் வ. கெளதமன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ”நான் நடித்து இயக்கிய “மகிழ்ச்சி” திரைப்படத்தில் “ஒரு வாரமா இந்த பாக்க வாயில ஊறப் போட்டண்டா கடிக்க முடியல… லவக்குன்னு கடிச்சிட்டியே நீ கெட்டிகாரண்டா” என்று கைகொட்டி கஞ்சா கருப்பின் தோளைத் தட்டி ஒரு குழந்தையை போல சிரிக்கும் ரங்கம்மா பாட்டியின் கொட்டப்பாக்கு நகைச்சுவையை யாராலும் மறக்க முடியாது.
அலைபேசியில் வரும் ரங்கம்மா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா… என்கிற கவியரசு கண்ணதாசனின் பாடலில் செல்வி ஜெயலலிதா அவர்களோடு நடிக்கத் தொடங்கி தனது மரணம் வரை நாலைந்து தலைமுறைகளோடு நடித்த ரெங்கம்மா பாட்டியின் கலைப் பயணம் போராட்டம் நிறைந்தது. எப்பொழுதாவது அலைபேசியில் வரும் ரங்கம்மா பாட்டி கௌதம் சார் படம் பண்ணுனா ரெங்கம்மா பாட்டிய மறந்துடாதீங்க….
எந்த வேஷம் குடுத்தாலும் பிச்சு ஒதறிடுவேன்… என்றபடி பெரு நம்பிக்கையோடு பேசும் ரங்கமா பாட்டியின் குரலை இனி கேட்கவே முடியாது. தன் இறுதி மூச்சு வரை கலையின் மீது அடங்கா காதல் கொண்டு இயங்கிய எங்கள் ரங்கம்மா பாட்டி அவர்களே…போய் வாருங்கள் நிம்மதியோடு…” என்று பதிவிட்டுள்ளார்.