'குணா' படத்தை மறு வெளியீடு செய்ய தடை விதித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் கமலஹாசன். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்து தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த 1991 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த படம் 'குணா'.

இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இன்றும் ரசிகர்கள் மத்தியில் குணா படம் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின் சில மாதங்களுக்கு முன் மலையாள மொழியில் வெளியாகி இருந்த படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இந்த படத்தில் குணா படத்தினுடைய வசனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சுமெல் பாய்ஸ்:
இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்தார். படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானல் சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை.

படத்தின் கதை:
இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகயிலும், குணா குகையை மையப்படுத்தியும் தான் எடுக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தி இருந்தது.
குணா படம் மறுவெளியீடு:
பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில் நடிகர் கமலஹாசனை படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் பட குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று போட்டோ எடுத்திருந்தார்கள். இதனால் குணா படத்தை டிஜிட்டல் முறையில் மறு வெளியீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அந்த வகையில் பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனம் தான் உலகம் முழுவதும் குணா படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்திருந்தார்கள்.

நீதிமன்றம் உத்தரவு:
இப்படி இருக்கும் நிலையில் குணா படத்தை மறு வெளியீடு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கிறது. கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் குணா படத்தை பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனம் மறுவெளியீடு செய்யக்கூடாது என்றும், நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பின் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு போட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வருகிற ஜூலை 22 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனம் உயர்நீதி மன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.






